வீடுகளின் பூட்டை உடைத்து 20 சவரன், ரூ.1.15 லட்சம் திருடிய வாலிபர் சிக்கினார்
சென்னை: சென்னை ஆர்.ஏ.புரம் வள்ளீஸ்வரன் தோட்டம் பி-பிளாக் பகுதியை சேர்ந்தவர் ராஜா (40). இவர் பழைய பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருகிறார். கடந்த 7ம் தேதி ராஜாவின் தாய் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று, மாலை திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 20 சரவன் நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம் மாயமாகி இருந்தது.
இதேபோல், அன்றைய தினமே ஏ-பிளாக் பகுதியில் வசித்து வரும் ஆட்டோ டிரைவர் சரவணன் (38) என்பவான் வீட்டை உடைத்து 2 கிராம் தங்கம், ரூ.15 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து ராஜா மற்றும் சரவணன் ஆகியோர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில், ஆர்.ஏ.புரம் பகுதியை சேர்ந்த பழைய குற்றவாளி சரவணன் (36) என தெரியவந்தது. அவரை கைது செய்து, 20 சவரன் தங்கம், ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.