தீவிரமடைந்தது இளைஞர்கள் போராட்டம் நேபாள பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா: அதிபர், அமைச்சர்களின் வீடுகள் தீ வைத்து எரிப்பு, நாடாளுமன்ற கட்டிடத்தையும் கொளுத்தினர், உயிருக்கு பயந்து அமைச்சர்கள் தப்பி ஓட்டம்
காத்மாண்டு: சமூக ஊடகங்களுக்கு தடை விதித்ததை தொடர்ந்து ஏற்பட்ட இளைஞர்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அதிபர், பிரதமர், முன்னாள் அதிபர்கள், அமைச்சர்களின் வீடுகள் மற்றும் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததால் நேபாளத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு சமூக ஊடகங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தது.
வெறுப்பு பேச்சுகள், அரசுக்கு எதிரான கருத்துக்கள் பரப்பப்படுவதால் சமூக ஊடகங்கள் அரசின் விதிகளுக்கு இணங்குவதாக ஒப்புக் கொண்டு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதை செய்யத் தவறியதால் பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு நேபாள அரசு தடை விதித்தது. இதனால் நாடு முழுவதும் ஜென் இசட் தலைமுறை இளைஞர்கள் அமைப்பு தலைமையில் நேற்று முன்தினம் போராட்டம் வெடித்தது. பல்வேறு மாணவர், இளைஞர் அமைப்பினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயமே அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தது.
தலைநகர் காத்மாண்டுவில் நாடாளுமன்றத்தை நோக்கி போராட்டக்காரர்கள் முன்னேற முயன்றதால் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 பேர் பலியாகினர். இதனால் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. இளைஞர்கள் மரணத்திற்கு பொறுப்பேற்று பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலக வேண்டும், புதிய அரசு அமைக்கப்பட வேண்டுமென இளைஞர்கள் 2வது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்த சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக நேபாள அரசு நேற்று முன்தினம் இரவு அறிவித்தது.
ஆனாலும், இளைஞர்களின் போராட்டம் கட்டுக்கடங்காத நிலைக்கு சென்றது. தலைநகர் காத்மாண்டு உட்பட பல பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவை மீறியும் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் பால்கோட்டில் உள்ள பிரதமர் ஒலியின் சொந்த வீட்டை தீ வைத்து எரித்தனர். அதே போல அதிபர் ராமச்ந்திர பவுடல், முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தஹல், தகவல் தொடர்பு அமைச்சர் பிரித்வி சுபா குரங், முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேஹக், முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தியூபா மற்றும் பல அமைச்சர்களுக்கு சொந்தமான வீடுகளை நொறுக்கி அங்கிருந்த பொருட்களை சூறையாடி கொளுத்தினர்.
நாடாளுமன்றம், அரசியல் கட்சி அலுவலகங்கள், உச்ச நீதிமன்ற கட்டிடத்திற்கும் தீ வைத்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த அரசு வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதனால், இளைஞர்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து ஒலி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதிபர் பவுடாவுக்கு அவர் எழுதிய ராஜினாமா கடிதத்தில், நாடு எதிர்கொள்ளும் அசாதாரண சூழ்நிலைகளை மேற்கோள் காட்டி, தற்போதைய சூழ்நிலைக்கு அரசியலமைப்பு மற்றும் அரசியல் தீர்வு காண வழி வகுக்க ராஜினாமா செய்வதாக கூறினார்.
பாதுகாப்பற்ற சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ இல்லங்கள் அமைந்துள்ள வளாகத்தில் 5க்கும் மேற்பட்ட ராணுவ ஹெலிகாப்டர்கள் கொண்டு வரப்பட்டு அவர்கள் பாதுகாப்பாக காத்மாண்டு விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதே போல பிரதமர் கே.பி. ஒலி வலியுறுத்தலின் பேரில் ராணுவம் அவரை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு காத்மாண்டு விமான நிலையத்திற்கு கொண்டு சென்றது.
இதனால் காத்மாண்டு விமான நிலையத்தை சுற்றி 300க்கும் மேற்பட்ட ராணுவத்தினரும், பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். அமைச்சர்கள் தப்பிக்க ஹெலிகாப்டர்களை வழங்கிய சிம்ரிக் ஏர்லைன்ஸ் நிறுவன அலுவலகமும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. பிரதமர் ஒலியின் ராஜினாமாவை அதிபர் பவுடா ஏற்றுக் கொண்ட பிறகும் போராட்டத்தின் தீவிரம் குறையாததால் இளைஞர்கள் அமைதி காக்க வேண்டுமென ராணுவம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நிறுவனங்களின் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.
நேபாள ராணுவத் தலைவர் அசோக் ராஜ் சிக்டெல், நேபாள அரசின் தலைமைச் செயலாளர் ஏக் நாராயண் ஆர்யல், உள்துறைச் செயலாளர் கோகர்ண தாவதி, ஆயுதக் காவல் படைத் தலைவர் ராஜு ஆர்யல் மற்றும் தேசிய புலனாய்வுத் துறைத் தலைவர் ஹூத்ராஜ் தாபா ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘‘பிரதமரின் ராஜினாமாவை ஏற்கனவே அதிபர் ஏற்றுக்கொண்டுள்ளதால், இந்த கடினமான சூழ்நிலையில் உயிருக்கும் பொது சொத்துக்கும் சேதம் ஏற்படாமல் இருக்க அனைவரும் நிதானமாக இருக்க வேண்டும்.
பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வு காண்பதுதான் ஒழுங்கு மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான ஒரே வழி’’ என வலியுறுத்தினர். இதே போல மக்கள் அனைவரும் அமைதியாக இருக்கவும், தேசிய சொத்துக்களைப் பாதுகாக்கவும் ராணுவமும் தனி அறிக்கையில் கேட்டுக் கொண்டது. அதிபர் ராமச்சந்திர பவுடல் விடுத்த வேண்டுகோளில், ‘‘நாடு ஒரு கடினமான சூழ்நிலையைக் கடந்து செல்கிறது.
பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் ராஜினாமா ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டதால், தற்போதைய முட்டுக்கட்டைக்கு தீர்வு காண, நாட்டையும், மக்களையும், ஜனநாயகத்தையும் நேசிக்கும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவை’’ என வலியுறுத்தினார். ஆனாலும் இளைஞர்களின் ஆத்திரம் அடங்காத நிலையில் நேபாளத்தில் தொடர்ந்து பதற்றமும், அரசியல் குழப்பமும் நீடிக்கிறது.
* மாஜி பிரதமரின் மனைவி உயிருடன் எரித்து கொலை
டல்லு பகுதியில் வசித்த முன்னாள் பிரதமர் ஜலநாத் கானல் வீட்டையும் போராட்டக்காரர்கள் நேற்று தீ வைத்து கொளுத்தினர். இதில் வீட்டிலிருந்த ஜலநாத்தின் மனைவி ரபி லட்சுமி சித்ரகர் உடலில் தீப்பற்றி படுகாயமடைந்தார். போராட்டக்காரர்கள் அவரை வலுக்கட்டாயமாக வீட்டில் அடைத்து வைத்து தீ வைத்து எரித்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரபி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
* இளைஞர்களின் கடும் கோபத்திற்கு காரணம்?
நேபாளத்தில் வேலையில்லா திண்டாட்டம் 20.83 சதவீதமாக உள்ளது. படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஒலி தலைமையிலான அரசு எடுத்த நடவடிக்கைகள் மக்களுக்கு திருப்திகரமாக இல்லை. இதனால், வேலையில்லாத காரணத்தால் ரஷ்யா-உக்ரைன் போருக்கு கூலிப்படைகளாக செல்லும் நிலைக்கு நேபாள இளைஞர்கள் சிலர் தள்ளப்பட்டுள்ளனர்.
அதே சமயம், அரசியல் தலைவர்களின் வாரிசுகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாகவும், விலை உயர்ந்த பொருட்களை வாங்கி குவிப்பதாகவும், ஊழல் மலிந்து கிடப்பதாகவும் சமூக ஊடகங்களில் சமீபகாலமாக செய்திகள் பரவுகின்றன. ஜென் இசட் மற்றும் நெப்போ கிட்ஸ் எனப்படும் அமைப்புகள் பல புகைப்பட ஆதாரங்களுடன் வாரிசுகளின் சொகுசு வாழ்க்கையை சமூக ஊடகங்கள் மூலம் நிரூபித்தனர்.
இதனால், அரசியல் தலைவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள சமூக ஊடகங்களுக்கு தடை விதித்ததும் நேபாள இளைஞர்கள் கொதித்துப் போய், தங்கள் உயிரையும் பணயம் வைத்து போராட்டம் நடத்தி அரசாங்கத்தையே கவிழ்த்துள்ளனர்.
* அடுத்த பிரதமர் யார்?
ஜென் இசட் இளைஞர்கள் விரும்பும் அடுத்த நேபாள பிரதமராக காத்மாண்டு மேயர் பாலேன் ஷா உள்ளார். சில ஆண்டுகள் முன்பாக, ராப் இசை நிகழ்ச்சி மூலம் நேபாளத்தின் வறுமை, வளர்ச்சியின்மை மற்றும் அரசியல் ஊழல் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி பாடல்கள் பாடி இளைஞர்களை கவர்ந்தவர். கே.பி.சர்மா ஒலியின் ராஜினாமாவைத் தொடர்ந்து இளைஞர்கள் அமைதி காக்க வேண்டுமென அவரும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
* நேபாள பயணத்தை தவிர்க்க இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்
நேபாளத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘நேபாளத்தில் தீவிரமாகும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நிலைமை சீராகும் வரை இந்திய மக்கள் அங்கு பயணத்தை ஒத்திவைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தற்போது நேபாளத்தில் உள்ள இந்திய குடிமக்கள் தங்கள் தற்போதைய வசிப்பிடங்களில் தங்கியிருக்கவும், தெருக்களில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும், உரிய எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என கூறப்பட்டுள்ளது. காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
* அதிபர் ராஜினாமாவா?
பிரதமர் சர்மா ஒலி ராஜினாமா செய்த அடுத்த சில நிமிடங்களில் அதிபர் பவுடலும் பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் சிறிது நேரத்தில் அத்தகவலை அதிபர் அலுவலகம் மறுத்தது.
* மேலும் 2 பேர் பலி
இளைஞர்கள் போராட்டத்தில் நேற்று முன்தினம் 19 பேர் பலியான நிலையில் நேற்றைய போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் மேலும் 2 பேர் பலியானதாக கூறப்படுகிறது. 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
* விமானங்கள் ரத்து
நேபாள தலைநகரில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதைத் தொடர்ந்து, இண்டிகோ மற்றும் நேபாள ஏர்லைன்ஸ் ஆகியவை டெல்லியில் இருந்து காத்மாண்டுவுக்கான தங்கள் விமானங்களை ரத்து செய்தன. காத்மாண்டு சென்ற ஏர் இந்தியா விமானமும் மீண்டும் டெல்லிக்கே திரும்பி வந்தது. இதனால் நேபாளத்திற்கான விமான சேவை நேற்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டது.
* சீன ஆதரவாளர் ஒலி
பிரதமர் பதவியில் இருந்து விலகிய கே.பி.ஒலி மன்னராட்சிக்கு எதிராக கடும் போராட்டங்களை நடத்தியதால் 1973 முதல் 1987 வரை தொடர்ந்து 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் தலைவரான ஒலி 2015 அக்டோபரில் முதல் முறையாக பிரதமர் ஆனார். சீனாவின் ஆதரவாளரான ஒலியின் 11 மாத ஆட்சியில் இந்தியா, நேபாளத்தின் உறவுகள் விரிசல் அடைந்தன. நேபாளத்தின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாக அவர் பகிரங்கமாக விமர்சித்தார்.
2018ல் 2வது முறையாக அவர் பதவியேற்ற போது லிபுலேக், காலாபானி மற்றும் லிம்பியாதுரா பகுதிகளைக் கொண்ட புதிய அரசியல் வரைபடத்தை நேபாள நாடாளுமன்றம் ஒருமனதாக அங்கீகரித்த பின்னர் இந்தியாவின் கோபத்திற்கு ஆளானார். 3வது முறையாக 2021 மே 14ம் தேதி மைனாரிட்டி பிரதமராக பதவியேற்ற அவர் 60 நாட்கள் மட்டுமே பதவி வகித்தார். இறுதியாக 2024 ஜூலையில் 4வது முறையாக பிரதமரமான ஒலி அடுத்த மாதம் இந்தியா வர இருந்தார். கடந்த 2008ல் மக்களாட்சி மலர்ந்த நேபாளத்தில் 17 ஆண்டுகளில் 14 அரசுகள் ஆட்சிப் பொறுப்பு ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
* அமைச்சர்களை ஓட, ஓட விரட்டி அடித்தனர்
காத்மாண்டுவின் புடனில்காந்தாவில் உள்ள நேபாள முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தியூபா மற்றும் அவரது மனைவியும் வெளியுறவு அமைச்சருமான அர்சு ராணா தியூபா ஆகியோரின் வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கினர். வீட்டை அடித்து சேதப்படுத்திய போராட்டக் குழுவினர், பகதூர் தியூபா மற்றும் ராணா தியூபாவை சாலையில் இழுத்து வந்து முகத்தில் சரமாரியாக குத்தி ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர்.
தாக்குதல்களுக்குப் பிறகு ராணா தியூபாவின் முகத்தில் ரத்தம் வழிந்ததை போராட்டக்காரர்கள் வீடியோ எடுத்தனர். பின்னர் பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து அவர்களை மீட்டுச் சென்றனர். இதே போல, நிதி அமைச்சர் பிஷ்ணு பவுடலை போராட்ட கும்பல் ஒன்று தெருவில் ஓட ஓட விரட்டி அடித்த வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன. அமைச்சர் பிஷ்ணு ஓடி வர ஒரு இளைஞர்கள் எட்டி உதைத்ததும் அவர் நிலைதடுமாறி விழுகிறார்.
* துபாய் தப்பிச் செல்ல திட்டம்?
ராணுவ ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டு விமான நிலையத்திற்கு தப்பிச் சென்ற கே.பி.சர்மா ஒலி தனது உயிருக்கு பயந்து துபாய் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. மருத்துவ காரணங்களுக்காக அங்கு செல்லும் ஒலி, துபாயிலிருந்து வேறொரு நாட்டில் தஞ்சமடையலாம் எனவும் கூறப்படுகிறது. சமீபத்தில் வங்கதேசத்தில் இதே போல மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தால் ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்தது. ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.