தூத்துக்குடியில் வாலிபர் கொலை; நண்பர்கள் அழைத்துச் சென்று குத்திக் கொன்ற கொடூரம்: கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வாலிபரை நண்பர்கள் நட்பாக பேசி அழைத்துச் சென்று குத்திக் கொன்ற கொடூரம், போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தாளமுத்துநகர், துரைசிங் நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சூர்யா (22). இவர் ஸ்வீட் மாஸ்டர் தொழிலையும், மீன்பிடி தொழிலையும் செய்து வந்தார். நேற்று மாலையில் சூர்யாவை 2 பைக்குகளில் வந்த நண்பர்கள் 4 பேர் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பின்னர் இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்து அவரது பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர். அவரைப் பற்றிய எந்த விவரமும் கிடைக்கவில்லை. இந்நிலையில் வெள்ளப்பட்டி அருகே உள்ள காட்டுப்பகுதியில் சூர்யா கத்தியால் சரமாரி குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி ஏஎஸ்பி மதன், தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் அருளப்பன், எஸ்ஐ முத்துராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சூர்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தாளமுத்துநகர் கணபதி நகரைச் சேர்ந்த உத்திரகண்ணன், சமீர் வியாஸ்நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து, மேல அழகாபுரியைச் சேர்ந்த மாரிமுத்து, தாளமுத்துநகரைச் சேர்ந்த அஜித் ஆகிய 4 பேர் ஏற்கனவே சூர்யாவின் நண்பர்கள். அவர் அவரிடம் நட்பாக பேசி மது அருந்த அழைத்துள்ளனர்.
அப்போது அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் சூர்யா கொலை செய்யப்பட்டிருப்பது, தெரியவந்துள்ளது. இதையடுத்து தலைமறைவான 4 பேரை இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். நட்பாக பேசி தூத்துக்குடி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று வாலிபரை 4 பேர் படுகொலை செய்த சம்பவம், தூத்துக்குடி சுற்று வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.