கடன் பிரச்னையில் சிக்கி மீள முடியாமல் தவிப்பு; நண்பருடன் செல்போனில் பேசியபடி ரயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை: எர்ணாவூரில் பரிதாபம்
திருவொற்றியூர்: நண்பருடன் வீடியோ காலில் பேசியபடி ரயில்முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். கடன் பிரச்னையில் இருந்து மீளமுடியாமல் தவித்ததால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் கோகுல் (31). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றிவந்தார். இவரது தந்தை மணி சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். இதனால் கோகுல் தாயுடன் வசித்துவந்துள்ளார். இந்தநிலையில் தாய்க்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கோகுல் மிகுந்த வேதனை அடைந்துள்ளார். ஏற்கனவே தந்தையின் மருத்துவ செலவுக்கு கடன் வாங்கியது தற்போது தாயின் சிகிச்சைக்கு கடன் வாங்கியது என்று கோகுல் தவித்துள்ளார்.
இந்த நிலையில், கோகுலுக்கு வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்துவந்த கோகுல், நள்ளிரவு வரை தூக்கம் வராமல் தவித்த நிலையில், நண்பர் அஜித்துக்கு போன் செய்து தனக்கு ஏற்பட்டுள்ள கடன் பிரச்னை மற்றும் அதன்காரணமாக ஏற்பட்டுள்ள மன உளைச்சல் பற்றி தெரிவித்து வேதனைப்பட்டுள்ளார். இந்த நிலையில், படுக்கையில் இருந்து எழுந்து நண்பருடன் தொடர்ந்து செல்போனில் பேசியபடியே எர்ணாவூர் மசூதி ரயில்வே தண்டவாளம் அருகே சென்றபோது திடீரென எதிரில் வந்த மின்சார ரயிலில் குறுக்கே பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதை வீடியோ காலில் பார்த்த நண்பர் அஜித் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார்.
இதையடுத்து அஜித் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விரைந்து சென்று கோகுல் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார், கடன் பிரச்னையால்தான் தற்கொலை செய்தாரா, வேறு ஏதாவது பிரச்னை உள்ளதா என்று விசாரிக்கின்றனர்.