சமூக வலைதளத்தால் ஏற்பட்ட வினை; ‘நட்பு... பலாத்காரத்திற்கான உரிமம் அல்ல’: வாலிபரின் முன்ஜாமீன் மனு அதிரடி தள்ளுபடி
புதுடெல்லி: சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வாலிபரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த டெல்லி உயர் நீதிமன்றம், ‘நட்பு என்பது பலாத்காரத்திற்கான உரிமம் அல்ல’ என கடுமையாக சாடியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், 17 வயது சிறுமியுடன் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி, அந்த சிறுமியை நேரில் சந்திக்க அழைத்த அவர், கோவிந்த்புரியில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, அந்த சிறுமியை சட்டவிரோதமாக அடைத்து வைத்து, பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் கைதாவதை தவிர்க்க, குற்றம்சாட்டப்பட்ட வாலிபர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அச்சிறுமியுடன் சம்மதத்தின் பேரிலேயே உறவு வைத்திருந்ததாகவும், புகார் அளிக்க 11 நாட்கள் தாமதம் ஆகியுள்ளதாகவும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த மனு, நீதிபதி ஸ்வரண காந்தா சர்மா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்டவரின் வாதத்தை நிராகரித்த நீதிபதி, ‘இருவரும் நண்பர்களாகவே இருந்தாலும், அந்த நட்பு, பாதிக்கப்பட்ட சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்யவோ, நண்பரின் வீட்டில் அடைத்து வைத்து இரக்கமின்றி தாக்கவோ எந்த உரிமத்தையும் வழங்காது.
மேலும், சிறுமிக்கு ஏற்பட்ட அச்சம் மற்றும் மன அதிர்ச்சி காரணமாகவே புகார் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. இந்த வழக்கின் தீவிரத்தன்மை, மருத்துவ பரிசோதனை முடிவுகள் மற்றும் பிற ஆதாரங்களை கருத்தில் கொண்டும், குற்றம்சாட்டப்பட்டவர் ஏற்கனவே நான்கு முறை விசாரணைக்கு ஒத்துழைக்காததாலும், அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.