பெண் குளித்ததை வீடியோ எடுத்த வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை: திருவொற்றியூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு
திருவொற்றியூர்: வீட்டில் உள்ள பாத்ரூமில் இளம்பெண் குளித்ததை வீடியோ எடுத்த வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சென்னை மணலி பகுதியில் வசித்துவரும் 23 வயது இளம்பெண். இவர் கடந்த 2021ம் ஆண்டு தனது வீட்டில் உள்ள பாத்ரூமில் குளித்தபோது அந்த பகுதியை சேர்ந்த மோனிஷ் கவுதம் (27) என்பவர் கதவின் ஓட்டை வழியாக செல்போன் மூலம் பெண் குளிப்பதை படம் பிடித்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண் உடனடியாக உடைகளை அணிந்துகொண்டு வெளியே வந்து வாலிபரை மறித்து செல்போனில் உள்ள வீடியோக்களை அழிக்கும்படி எச்சரித்துள்ளார். அப்போது கவுதம், அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
இதுசம்பந்தமாக பெண் கொடுத்த புகாரின்படி, மணலி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து மோனிஷ் கவுதமை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கு திருவொற்றியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை அனைத்தும் முடிவுற்ற நிலையில் நேற்று இந்த வழக்கில் தீரப்பு அளிக்கப்பட்டது. அதில், ‘’பெண்ணை வீடியோ எடுத்த மோனிஷ் கவுதமுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது’’ என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.