இளைஞர்களின் போராட்டத்துக்கு பணிந்து பதவியை ராஜினாமா செய்தார் நேபாள பிரதமர்
காத்மண்டு: நேபாளத்தில் இளைஞர்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு பணிந்து நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். போராட்டத்தின் 19 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் ஏற்பட்ட வன்முறைப் போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்த நிலையில், அந்நாட்டு அரசு சமூக ஊடகங்கள் மீதான தடையை நீக்கி வன்முறை சம்பவம் குறித்து விசாரிக்க குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.
நேபாள நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு கடந்த 4ம் தேதி பேஸ்புக், எக்ஸ், யூடியூப் போன்ற முக்கிய சமூக ஊடக செயலிகள் நாட்டில் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறி தடை விதித்தது. அரசின் இந்த முடிவுக்கு எதிராக கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட இளைய தலைமுறையினர் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். சமூக ஊடகத் தடைக்கு எதிராகவும், நாட்டில் நிலவும் ஊழல் மற்றும் மோசமான பொருளாதாரச் சூழலுக்கு எதிராகவும் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில், ‘இளம் தலைமுறை நேபாளம்’ என்ற பெயரில் தலைநகர் காத்மண்டுவில் நேற்று நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றபோது, பாதுகாப்புப் படையினர் அவர்களைத் தடுக்க முயன்றனர். அப்போது ஏற்பட்ட மோதலில், பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் வீசினர். இந்த கொடூரத் தாக்குதலில் தலைநகர் காத்மண்டுவில் 17 பேரும், இடாஹாரி நகரில் 2 பேரும் என மொத்தம் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கூடிய அவசர அமைச்சரவைக் கூட்டத்தில், சமூக ஊடகங்கள் மீதான தடையை உடனடியாக ரத்து செய்வதாக நேபாள அரசு அறிவித்தது.
அதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் சமூக ஊடகங்கள் வழக்கம் போல் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும் வன்முறை பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்பும் நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த துயரச் சம்பவம் குறித்து பிரதமர் கே.பி. சர்மா ஒலி வெளியிட்டுள்ள அறிக்கையில்:
இளைஞர்களின் அமைதியான போராட்டத்தில் சமூக விரோத சக்திகளின் ஊடுருவலால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. அப்பாவி குடிமக்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த வன்முறைச் சம்பவங்கள், அதன் பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து முழுமையாக விசாரிக்க தனி விசாரணைக் குழு அமைக்கப்படும். அக்குழு 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேசமயம், இந்தச் சம்பவத்திற்காக பிரதமர் என்ற முறையில் நான் பதவியில் இருந்து விலகப் போவதில்லை’ என தெரிவித்திருந்தார்.
இதனிடையே, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்கள் இந்த வன்முறைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன. பாதுகாப்புப் படையினர் மிதமிஞ்சிய பலத்தைப் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ள சர்வதேச அமைப்புகள், இந்த படுகொலைகள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், பேச்சுரிமை மற்றும் அமைதியாக ஒன்றுகூடும் மக்களின் அடிப்படை உரிமைகளை நேபாள அரசு மதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.
நேபாளர் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டகாரர்கள் பிரதமர் இல்லத்துக்கு தீவைத்தார். போராட்டம் தீவிரவடைந்ததை அடுத்து நேபாள பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.