இளையோர் இலக்கிய பயற்சி தொடக்கம்
சென்னை: வேப்பேரி, தமிழ்நாடு அரசு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் இளையோர் இலக்கிய பயிற்சி பாசறையை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது: எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் இருக்க வேண்டும் என்பதை கருதி, தமிழ் வளர்ச்சியை இன்றைய நிலைக்கு முன்னெடுப்பாக எடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். நம்முடைய தாய் மொழியும் எந்த விதத்திலும் பின்னடைவு அடையக்கூடாது என்பதை உறுதி எடுத்துக் கொண்டு, அந்த சூழ்நிலையை பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறார்.
ஆண்டுதோறும் நடைபெறும் பயிற்சி பாசறை முழுமையான பயன் மாணவர்களை சென்றடைய வேண்டும் என்பதே அரசின் எண்ணம். அதை ஈடேற்றும் வகையில்தான் இந்த பாசறை நிகழ்வு அமைந்திருப்பது பாராட்டிற்குரியது. உங்களுடைய விடாமுயற்சியால் உங்கள் வருங்காலம் சிறக்க இந்த பாசறை அடித்தளமாக அமையும். உங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு அளப்பரியது. அதை அருமை உணர்ந்து பயன் பெறுங்கள்; வாழ்க்கையில் பாராட்டை பெறுவீர்கள்.
தமிழால் நாங்கள் உயர்ந்தோம்; தமிழராய் தலை நிமிர்ந்தோம் என்று அண்ணா குறிப்பிட்டதுபோல, அறிவாலும், ஆற்றலாலும் ஆகாத காரியம் இல்லை என்கின்ற சொல்லில், அறிவும், ஆற்றலும் சேர்ந்து உழைத்தால், இதை வெற்றி நிச்சயம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த வெற்றி எப்போதும் உங்களை விட்டு நீங்காது.
இவ்வாறு அவர் பேசினார்.