அவிநாசி முதல் கூட்டப்பள்ளி வரை முறையாக பஸ்கள் இயக்க வாலிபர் சங்கம் கோரிக்கை
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அவிநாசி முதல் கூட்டப்பள்ளி வரை செல்லும் பேருந்துகளை முறைப்படுத்தி சரியான நேரத்துக்கும், கூடுதாலான நடைகளாகவும் இயக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அவிநாசி ஒன்றிய கிளை சார்பாக திருப்பூர் போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் நேற்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறியிருப்பவதாது: அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட வடுகபாளையம், நடுவச்சேரி, புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து மக்கள் வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரிகள் செல்வதற்கும் மற்றும் அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் அவிநாசி, நம்பியூர், சேவூர், திருப்பூர், கோவை ஆகிய நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்த பகுதி வழியாக 36, 36A, N5 ஆகிய பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆனால் வார நாட்களில் பல நேரங்களில் செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் முழுமையாக இயக்கப்படுவதில்லை. காலை 10.30 மணிக்கு பிறகு மாலை 4 மணிவரை வடுகபாளையம் பகுதிக்கு எந்த பேருந்து வசதியும் இல்லாமல் உள்ளது. இதனால் மக்கள் மருத்துவமனை செல்வதற்கும், அவசர தேவைகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் வந்து செல்வது சிரமமாக உள்ளது.
இதனால் வேலைக்கு செல்லும் ஆண்களும், பெண்களும் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் குறித்த நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியாமல் சிரமங்களை சந்திக்கின்றனர். மேலும் மாலை நேரத்தில் அவிநாசியில் பள்ளிகள், கல்லூரிகள் முடியும் நேரத்திற்கு பேருந்துகள் இல்லை.
குறிப்பாக அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் மாலை 4.10 மணிக்கு எடுப்பதை 4.30 மணிக்கு மாற்றித்தருவதோடு, மேற்குறிப்பிட்டுள்ள கிராமங்களில் முறையாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதல் பேருந்துகளையும் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் பிரவீன் குமார், ஒன்றிய செயலாளர் வடிவேல், பொருளாளர் தங்கராஜ், கமிட்டி உறுப்பினர் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.