போலீசாரிடமிருந்து தப்பிக்க பள்ளி மாணவர்களை வைத்து மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது
*316 குவாட்டர், பைக் பறிமுதல்
விழுப்புரம் : விழுப்புரம் அருகே போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருக்க பள்ளி மாணவர்களை வைத்து மதுபாட்டில் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 316 குவாட்டர், பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழக எல்லையான விழுப்புரம் மாவட்டம் வழியாக புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில், சாராயம் கடத்திச் செல்வதை தடுக்கும் வகையில் மதுவிலக்கு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டும், நடமாடும் மதுவிலக்கு போலீசார் தமிழக எல்லை பகுதியில் வரும் சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு மது கடத்தலை தடுத்து வருகின்றனர். கடத்தலில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரம் அடுத்த கெங்கராயபாளையம் சோதனை சாவடியில் நேற்று மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் குழந்தைகளை பள்ளி சீருடைகளுடன் அமர வைத்துக்கொண்டு வாலிபர் பைக்கை அதிவேகமாக ஓட்டி வந்தார்.
சந்தேகத்தின்பேரில் போலீசார் பைக்கை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது அதில் 180 மில்லி அளவு கொண்ட 124 மதுபாட்டில்களும், 90 மில்லி அளவு கொண்ட 192 என மொத்தம் 316 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் விழுப்புரம் நந்தனார் தெருவை சேர்ந்த பர்வீன்(30) என்பதும், புதுச்சேரியில் குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு விற்பனைக்காக கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக பள்ளி சீருடையில் குழந்தைகளை உட்கார வைத்துக்கொண்டு மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து மதுபாட்டில்கள், பைக் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட பர்வின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.