வருமானத்தை விட்டு வந்தேன் என்கிறாயே யார் வரச்சொன்னா... வான்னு உன் வீட்டு வாசல்ல எவன்டா நின்னா...? விஜய்யை ஏக வசனத்தில் கிண்டல் செய்த சீமான்
கோவை: கோவை ராஜவீதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நடிகர் விஜய் குறித்து பேசும் போது, ‘‘ நான் என் உச்சத்தை விட்டு அவ்வளவு வருமானத்தை விட்டு வந்தேன் என்கிறாயே, வா என யார் அழைத்தார், யார் வர சொன்னா, உன் வீட்டு வாசலில் எவன்டா வந்து நின்னா, உன் வீட்டு வாட்சுமேன் கூட நிற்கலையேடா. அடைக்கலம் தேடி வரவில்லை, படைக்கலத்துடன் வந்திருக்கிறேன். யார் வர சொன்னா, எதுக்கு வர்றே. என்னோட அன்பு சகோதரர் அஜித்தும், ஐயா ரஜினிகாந்த்தும் தங்களோட புகழை வியாபாரம் செய்ய விரும்பவில்லை. டேய் மக்களின் பிரச்னை இந்த நிலத்தில் தான். எம்ஜிஆர் ஒன்றரை மணி நேரம் ஆனாலும் எழுதி வைக்காமல் பேசுவார், விஜயகாந்த் மனசில் இருந்து மக்கள் மொழியில் பேசுவார்.
ஆனால் எடப்பாடியும், என் தம்பியும் (விஜய்) முழு சீட்டு வைத்து பேசுவார்கள். பாத்து எழுதும் மாணவன், படித்து எழுதும் மாணவன் எந்த மாணவன் நல்லவன்னு நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நாளைக்கு கோயம்புத்தூர் வந்தா இட்லி, மீன் குழம்பு நன்றாக இருக்கும்...சுக்கா நன்றாக இருக்கும். அது நல்லா இருக்கும் என அப்படித்தான் பேச போறார். திருச்சி என்றால் மலைக்கோட்டை இப்படி தான் அவர் பேசுவார். டிவிகே என்று சொல்லி வருபவர்களிடம் நாங்கள் டீ விற்க வந்த கூட்டம் அல்ல, இந்த நாட்டில் நிலவும் தீய அரசியலுக்கு தீ வைக்க வந்த கூட்டம் என்று சொல்ல வேண்டும். நாங்கள் தளபதி, தளபதி என்று கத்த வந்த கூட்டம் அல்ல, இந்த நாட்டின் தலைவிதியை மாற்ற வந்த கூட்டம் என்று சொல்ல வேண்டும். நாங்கள் தற்குறி கூட்டம் அல்ல தத்துவ கூட்டம். கூடி கலைகிற காகங்கள் அல்ல, கூடி பெய்கிற மேகங்கள் என்று காட்ட வேண்டும், ’’ என ஏக வசனத்தில் கிண்டல் செய்தார்.