இளம்பெண் பலாத்காரம் 2 போலீஸ்காரர் டிஸ்மிஸ்: ஏஎஸ்பி, இன்ஸ்பெக்டரிடம் விசாரணை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் கான்ஸ்டபிள்கள் சுந்தர்(32), சுரேஷ்ராஜ்(30) ஆகியோர் கடந்த 30ம் தேதி அதிகாலை திருவண்ணாமலை ரிங்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வாழை லோடு ஏற்றி வந்த மினிவேனை மடக்கி அதில் வந்த 20 வயது ஆந்திர மாநில இளம்பெண், அவரது சித்தியை விசாரிப்பதற்காக மயான பகுதிக்கு அழைத்து சென்று இளம்பெண்ணை சித்தியின் கண்ணெதிரே கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். புகாரின்படி இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்து எஸ்பி சுதாகர் உத்தரவிட்டார். இதற்கிடையே பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை முடிந்து, அவரது விருப்பத்தின்பேரில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில், இளம்பெண் பலாத்கார வழக்கில், தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள்கள் சுந்தர், சுரேஷ்ராஜ் ஆகிய இருவரும், பணியில் இருந்து நிரந்தரமாக பணிநீக்கம்(டிஸ்மிஸ்) செய்யப்பட்டுள்ளனர். அதற்கான, உத்தரவை, வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் வெளியிட்டுள்ளார். மேலும், இரவு நேர ரோந்துப்பணியில் ஈடுபடும் போலீசாரை மேற்பார்வையிட வேண்டிய சம்பந்தப்பட்ட திருவண்ணாமலை டவுன் ஏஎஸ்பி மற்றும் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் முறையாக பணியில் ஈடுபட்டனரா என துறை ரீதியான விசாரணை நடத்தவும், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கவும் ஐஜி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி நேற்று முன்தினம் திருவண்ணாமலைக்கு வந்து எஸ்பி சுதாகரிடம் நடந்த சம்பவங்கள் குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.