வீடு புகுந்து பெட்ரோல் ஊற்றி இளம்பெண் எரித்துக் கொலை: ஆண் நண்பர் தற்கொலை முயற்சி
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே வீட்டுக்குள் புகுந்து பெண்ணை எரித்துக் கொன்று ஆண் நண்பர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் இரிக்கூர் அருகே குற்றியாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் அச்சுதன். அவரது மகன் அஜீஷ். துபாயில் பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி பிரவீணா (39). இந்த தம்பதிக்கு ஒரு மகள் உண்டு. பிரவீணா தன்னுடைய கணவனின் பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இவருக்கு அருகில் உள்ள கூட்டாவு என்ற பகுதியை சேர்ந்த ஜிஜேஷ் என்பவருடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மதியம் பிரவீணாவின் வீட்டுக்கு ஜிஜேஷ் வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த அஜீஷின் தந்தை அச்சுதனிடம் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே அவர் தண்ணீர் எடுக்க சென்றபோது நைசாக வீட்டுக்குள் நுழைந்த ஜிஜேஷ், வீட்டின் பின்புறத்தில் நின்று கொண்டு இருந்த பிரவீணாவின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.
பின்னர் தனது உடலிலும் பெட்ரோல் ஊற்றி அவர் தீ வைத்தார். அதைத்தொடர்ந்து 2 பேரும் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தனர். அவர்களது அலறல் சத்தத்தைக் கேட்டு பக்கத்து வீட்டினர் அங்கு விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது பிரவீணாவும், ஜிஜேஷும் தீயில் கருகிக் கிடந்தனர். இந்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். தொடர்ந்து தீயில் கருகி கிடந்த 2 பேரையும் மீட்டு கண்ணூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி பிரவீணா இன்று காலை இறந்தார். ஜிஜேஷுக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த இரிக்கூர் போலீசார், பிரவீணாவை எரித்துக் கொலை செய்து ஜிஜேஷ் தற்கொலை செய்ய முயற்சிக்க காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.