வாலிபருடன் தகாத உறவு இரும்பு கம்பியால் தாயை அடித்துக்கொன்ற மகன்
களக்காடு: வாலிபருடன் தகாத உறவில் இருந்த தாயை, மகன் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி, எடுப்பல் கிராமத்தை சேர்ந்தவர் ரெஜினா (40). கூலி தொழிலாளி. இவரது கணவர் பூல்பாண்டி 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இரு மகன்களுடன் ரெஜினா தனியாக வசித்து வந்தார். மூத்த மகன் கொம்பையா (22), கூலி தொழிலாளி. 13 வயதான 2வது மகன் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ரெஜினாவிற்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் தகாத உறவாக மாறியது. இதையறிந்த கொம்பையா இருவரையும் கண்டித்துள்ளார். இருப்பினும் தகாத உறவை அவர்கள் கைவிடவில்லை. இது அக்கம் பக்கத்தினருக்கும் தெரியவந்ததால், கொம்பையா அவமானமடைந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் அப்பகுதியில் உள்ள கோயிலில் நடந்த கொடை விழாவை பார்க்க கொம்பையா சென்று விட்டார். அப்போது வாலிபரை வீட்டிற்கே வரவழைத்து ரெஜினா, அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். அதிகாலை 1 மணியளவில் கொடை விழாவிற்கு சென்ற கொம்பையா வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டிலுள்ள ஒரு அறையில் தாய் ரெஜினாவும், வாலிபரும் நெருக்கமாக இருந்ததை பார்த்த கொம்பையா கடும் அதிர்ச்சியடைந்தார். உடனே அந்த வாலிபர் நைசாக தப்பி ஓடி விட்டார்.
ஆத்திரத்தில் இருந்த கொம்பையா தாய் ரெஜினாவை சைக்கிளுக்கு காற்று அடிக்க பயன்படும் கம்பியால் கொடூரமாக தாக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ரெஜினா ரத்த வெள்ளத்தில் தரையில் சாய்ந்தார். தொடர்ந்து அவரது கழுத்தை பிடித்து நெரித்தார். சிறிது நேரத்தில் ரெஜினா உயிரிழந்தார். பின்னர் தாயின் சடலத்தை வீட்டில் இருந்து இழுந்து சென்று அருகில் உள்ள கோயில் அருகே வீசி விட்டு சென்று விட்டார். நேற்று காலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ரெஜினாவின் சடலத்தை பார்த்து, மூலைக்கரைப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கொம்பையாவை கைது செய்தனர். பக்கத்து வீட்டு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். வாலிபருடன் நெருக்கமாக இருந்த தாயை மகனே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.