இளம் ஆஸியுடன் 2வது ஓடிஐ இளம் இந்தியா இமாலய வெற்றி: தொடரையும் கைப்பற்றி அசத்தல்
பிரிஸ்பேன்: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான, இளம் ஆஸ்திரேலியா அணியை, இளம் இந்தியா அணி, 51 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இளம் இந்தியா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்று, 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடி வருகிறது. கடந்த 21ம் தேதி நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், பிரிஸ்பேன் நகரில் நேற்று 2வது ஒரு நாள் போட்டி நடந்தது. முதலில் ஆடிய துவக்க வீரர், கேப்டன் ஆயுஷ் மாத்ரே ரன் எடுக்காமல் அவுட்டான போதும், மற்றொரு துவக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி (14), 68 பந்துகளில் 70 ரன் விளாசினார்.
தவிர, விஹான் மல்கோத்ரா 70, அபிக்ஞான் குண்டு 71 ரன்கள் விரட்ட, இந்திய அணி 49.4 ஓவரில் 300 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதைத் தொடர்ந்து, 301 ரன் இலக்குடன் ஆஸி அணி களமிறங்கியது. துவக்க வீரர்கள் அலெக்ஸ் டர்னர் 24, சைமன் பட்ஜ் 14, பின் வந்த ஸ்டீவன் ஹோகன் 14, அலெக்ஸ் லீ யங் 11, கேப்டன் யாஷ் தேஷ்முக் 1 ரன்னில் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து அணியை சிக்கலில் தள்ளினர். ஆனால், பின்னர் இணை சேர்ந்த ஜெய்டன் டிரேப்பர், ஆர்யன் சர்மா பொறுப்புடன் ஆடி 7வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்தனர். ஜெய்டன் 107 ரன்னில் ஆட்டமிழந்தார். 47.2 ஓவரில் இளம் ஆஸி, 249 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதனால், 51 ரன் வித்தியாசத்தில் இந்தியா மகத்தான வெற்றியை பதிவு செய்து, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
* வைபவ் சூர்யவன்ஷி வைபோக சாதனை
இளம் ஆஸி அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி 70 ரன்கள் குவித்தார். அதில், 6 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் அடக்கம். இந்த சிக்சர்களுடன் சேர்த்து, வெறும் 10 இன்னிங்ஸ்களில், 41 சிக்சர்களை வைபவ் விளாசி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன், இளம் இந்தியா அணியில் ஆடிய உன்முக்த் சந்த் 21 இன்னிங்ஸ்களில் 38 சிக்சர் விளாசி, அதிக சிக்சர் விளாசிய இளம் இந்தியர் என்ற சாதனையை படைத்திருந்தார். அந்த சாதனையை வைபவ் தற்போது முறியடித்துள்ளார்.