விபத்தில் காயமடைந்து மூளைச்சாவுக்கு ஆளான புதுகை இளம்பெண் உறுப்புகள் தானம்
*திருச்சி, மதுரையை சேர்ந்த 6 பேர் பயனடைந்தனர்
மதுரை : மூளைச்சாவு அடைந்த புதுக்கோட்டையை சேர்ந்த இளம்பெண்ணின் உடலுறுப்புகள் அரசு மருத்துவமனையில் தானம் வழங்கப்பட்டு, இதன் மூலம் திருச்சி, மதுரையை சேர்ந்த 6 பேர் பயனடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோணப்பட்டுவை சேர்ந்தவர் முருகேஸ்வரி (23). சிவகங்கை பகுதியில் வசித்து வந்தார். கடந்த நவ. 21ம் தேதி காலை 6.30 மணியளவில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே டூவீலரில் சென்றபோது நடந்த நடந்த விபத்தில் கீழே விழுந்து பலத்த தலைக்காயத்திற்கு ஆளானார்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையின் அவசர விபத்து சிகிச்சைப்பிரிவில் உள்நோயாளியாக நவ. 22 மதியம் 1.45 மணிக்கு அனுமதிக்கப்பட்டார்.
தலைக்காயப்பிரிவு 101 ஐசியு வார்டில் சிறப்பு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் முருகேஸ்வரி நேற்று அதிகாலையில் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். அவரது உறவினர்கள் உடல் உறுப்புதானம் செய்ய முன் வந்து அவரது தந்தை சுப்ரமணியனிடம் ஒப்புதல் பெறப்பட்டது.
இதன்படி, முருகேஸ்வரியிடம் தானம் பெறப்பட்ட கல்லீரல் திருச்சி காவேரி மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம், இரு கண்களின் கருவிழிகள், தோல் போன்றவை மதுரை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் தனியார் மருத்துவமனைக்கும் என தானமாக வழங்கப்பட்டு, 6 பேருக்கு பொருத்தப்பட்டது.
மதுரை அரசு மருத்துவமனையின் தீவிர விபத்து சிகிச்சைப் பிரிவில் பிரேத பரிசோதனை நடத்தி, மதுரை அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஸ்குமார், நிலைய மருத்துவ அதிகாரி ஜெய. முரளிதரன் மற்றும் டாக்டர்கள், நர்ஸ்கள், பணியாளர்கள் உரிய மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அவரது குடும்பத்தாரிடம் போலீசார் மூலம் முருகேஸ்வரி உடல் ஒப்படைக்கப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு தமிழக அரசு சார்பாக இறுதி மரியாதை செய்வதற்காக, சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திடம் அன்னாரின் உடல் உரிய மரியாதையுடன் அனுப்பி வைக்கப்பட்டது.