வார விடுமுறையை கொண்டாட ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
*பரிசல், படகு சவாரி செய்து உற்சாகம்
சேலம் : வார விடுமுறையை கொண்டாட, ஒகேனக்கல், ஏற்காடு, கொல்லிமலை மற்றும் மேட்டூரில் நேற்று குவிந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் உற்சாகமாக பரிசல், படகு சவாரி செய்தும், அருவிகளில் குளித்தும் மகிழ்ந்தனர்.சேலம் மாவட்டத்தில் உள்ள ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் ‘ஜில்’ கிளைமேட் நிலவி வருகிறது.
அதே சமயம் இரவில் கடும் குளிர் நிலவுகிறது. ஞாயிறு விடுமுறை தினமான நேற்று, காலையில் இருந்தே சுற்றுலாப்பயணிகள் வரத்தொடங்கினர். மலைப்பாதையில் படர்ந்திருந்த பனிமூட்டத்தை ரசித்தவாறு கார், பைக்குகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
இதனால் ஏற்காடு அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, பகோடா பாயிண்ட், லேடீஸ் சீட், சேர்வராயன் கோயில், கிளியூர் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. குறிப்பாக, ஏற்காடு படகு இல்லத்தில், நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால், ஏற்காட்டில் உள்ள தள்ளுவண்டி கடைகள், ஓட்டல்களில் விற்பனை அதிகரித்தது. மேலும், வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளால், அங்குள்ள அனைத்து தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தன.
சுற்றுலா பயணிகள் வந்த வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். இதேபோல், மேட்டூர் அணை பூங்காவுக்கும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
அவர்கள் அணை கால்வாயில் உற்சாகமாக நீராடினர். பின்னர், அங்குள்ள அணை பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் குழந்தைகளுடன் விளையாடி பொழுதை போக்கி மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் அங்குள்ள கடைகளில் மீன் விற்பனை களைகட்டியது.
இடைப்பாடி அடுத்த பூலாம்பட்டிக்கும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பம், குடும்பமாக வந்தவர்கள் விசைப்படகில் சவாரி செய்து, காவிரியின் அழகை கண்டு ரசித்தனர். பின்னர், பில்லுக்குறிச்சி கால்வாயில் குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்தனர்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு, நேற்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பரிசல் சவாரி செய்து, பாறைகளுக்கு நடுவே சென்று கொட்டும் அருவிகளை கண்டு ரசித்தனர்.
பின்னர், ஆயில் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினி பால்ஸ், ஆற்றங்கரை ஓரங்களில் குளித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து, தொங்கும் பாலத்தின் மீது இருந்து அருவிகளை ரசித்து, அங்குள்ள வண்ண மீன் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம், ரெயின்போ பறவைகள் பூங்கா உள்ளிட்ட இடங்களை தங்கள் குடும்பத்தினருடன் கண்டு ரசித்தனர்.
கொல்லிமலை: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், சீதோஷ்ண நிலை மாறி இரவில் கடும் குளிர் நிலவி வருகிறது. காலையில், சில்லென்று குளிர் காற்று வீசி வருகிறது. காலை நேரங்களில், கடுமையான மேகமூட்டம், அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.
மலைப்பாதையில், மேகமூட்டங்கள் கடந்து செல்லும் காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. கடந்த இரு நாட்களாக கொல்லிமலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விடுமுறை தினமான நேற்று, சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
சென்னை, பெங்களூரு, ஐதராபாத், பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஐடி, நிதி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கார் மற்றும் டூவீலர்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வந்திருந்தனர். ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்அருவி, சினி பால்ஸ், சந்தனப்பாறை அருவிகளில் குளித்து விட்டு அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில்களில் சாமி தரிசனம் செய்வழ வழக்கம்.
நேற்று அனைத்து இடங்களும் வெறிச்சோடியது. அதே போல், தாவரவியல் பூங்கா, சிக்குப்பாறை காட்சிமுனையம், வாசலூர்பட்டி ஏரி உள்ளிட்ட பகுதிகள் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடியது. சோளக்காடு, தெம்பளம், திண்டு பகுதிகளில் உள்ள பழச்சந்தையில் தொடர் மழையால், பழங்களை வாங்க ஆட்கள் இல்லாததால் வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.