ஏமனில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் ஹவுதி போராளிகளின் பிரதமர் பலி
கெய்ரோ: ஏமனில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹவுதி போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்தின் பிரதமர் அகமது அல் ரஹாவி உட்பட பலர் கொல்லப்பட்டனர். ஏமனில், ஈரான் ஆதரவு, ஹவுதி படையினர் தலைநகர் சனா உட்பட பல பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்து, தனியாக ஆட்சி நடத்தி வருகின்றனர். நாட்டில் உள்ள வட மேற்கின் பெரும் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுதிகள் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்த்து வருகின்றனர். இஸ்ரேலை நோக்கி, டிரோன்கள், ஏவுகணைகளை வீசி அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர்.
காசா தாக்குதலை கண்டித்து செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறி வைத்து தாக்குகின்றனர். இதனால் இஸ்ரேலும், அமெரிக்காவும் ஏமனில் உள்ள சனா, ஹொடைடா உள்ளிட்ட பகுதிகள் மீது கடுமையான பதில் தாக்குதல் நடத்தின. இந்நிலையில் சனாவில் உள்ள முக்கிய கட்டிடங்களில் நேற்று இஸ்ரேல் வான் வழி தாக்குதல் நடத்தியது. இதில், ஹவுதிகளின் தலைவரும் பிரதமருமான அகமது அல் ரஹாவி கொல்லப்பட்டார். மேலும் பாதுகாப்பு அமைச்சரான அஸாத் அல் ஷர்காபி மற்றும் ஹவுதி படையின் மூத்த தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர்.