வுஹான் ஓபன் டென்னிஸ்; துள்ளியாடி வெற்றியை அள்ளிய சபலென்கா: அரையிறுதிக்கு முன்னேற்றம்
வுஹான்: வுஹான் ஓபன் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் நேற்று, உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா அபார வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். சீனாவின் வுஹான் நகரில் வுஹான் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த காலிறுதிப் போட்டி ஒன்றில் பெலாரசை சேர்ந்த உலகின் முதல் நிலை வீராங்கனை அரீனா சபலென்கா (27), கஜகஸ்தான் வீராங்கனை எலெனா ரைபாகினா (26) உடன் மோதினார். துவக்கம் முதல் துள்ளலுடன் ஆடிய சபலென்கா முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் அநாயாசமாக வென்றார். தொடர்ந்து நடந்த 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர் 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி வாகை சூடினார். அதனால் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வென்ற அவர் அரை இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா (31), செக் வீராஙகனை கேதரீனா சினியெகோவா (29) உடன் மோதினார். இந்த போட்டியில் அபாரமாக ஆடிய பெகுலா, 2-6, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். இன்னொரு போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீராங்கனை கோகோ காஃப் (21), ஜெர்மன் வீராங்கனை லாரா நடாலி சீக்மண்ட் (37) மோதினர். இந்த போட்டியில் 6-3, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வென்ற காஃப் அரை இறுதிக்கு தகுதி பெற்றார். இன்று நடக்கும் முதலாவது அரை இறுதிப் போட்டியில் சபலென்கா, ஜெஸிகா பெகுலா மோதவுள்ளனர்.