உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்றார் ஆன்டிம் பங்கல்!
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை ஆன்டிம் பங்கல் வெண்கலப் பதக்கம் வென்றார். 53 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஆன்டிம் பங்கல் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
நேற்று நடைபெற்ற மகளிர் 53 கிலோ வெண்கலப் பதக்க பிளே-ஆஃப் போட்டியில், யு23 உலக சாம்பியனான எம்மா ஜோனா டெனிஸ் மால்ம்கிரெனை 9-1 என்ற கணக்கில் வீழ்த்தி, ஆன்டிம் பங்கல் தனது இரண்டாவது உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை வென்றார்.
இரண்டு முறை யு20 உலக சாம்பியனான ஆன்டிம் பங்கல் ஏற்கனவே 2023ல் வெண்கலம் வென்றிருந்தார், ஆனால் 2024ம் ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் சுற்றில் வெளியேறிய பின்னர், அதைத் தொடர்ந்து நாடுகடத்தப்பட்ட அவமானத்திற்குப் பிறகு அழுத்தத்தின் கீழ் இந்தப் போட்டிக்குள் நுழைந்தார்.
ஆனால், இன்று பெற்ற வெற்றியின் மூலம், 21 வயதான ஆன்டிம் பங்கல், வினேஷ் போகட்டுக்குப் பிறகு பல உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்ற 2வது இந்தியப் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார். பெண்கள் பிரிவில் அல்கா தோமர், கீதா போகட், பபிதா போகட், பூஜா தண்ட, சரிதா மோர் மற்றும் அன்ஷு மாலிக் உள்ளிட்ட பிற பதக்கங்கள் வென்றுள்ளனர்.
ஒரு காலத்தில் வினேஷ் போகட் ஆதிக்கம் செலுத்திய 53 கிலோ பிரிவில் இப்போது ஒரு புதிய இந்திய முகம் முதலிடத்தில் உள்ளது. ஆன்டிம் பங்கல் ஜூனியர் மட்டத்திலிருந்து சீனியர் மட்டத்திற்கு சீராக மாறியுள்ளார்.