உலகளவில் 6 விமான நிலையங்கள் கொண்ட பட்டியலில் டெல்லி: ஆண்டுக்கு 10.90 கோடி பயணிகளை கையாளும் டெல்லி விமான நிலையம்
டெல்லி: உலகளவில் 10 கோடி பயணிகளை கையாளும் விமான நிலையங்களில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் இணைந்துள்ளது. பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களின் போக்குவரத்து குறித்த தரவுகளை சேகரிக்கும் OAG நிறுவனம் அதிக பயணிகளை கையாளும் விமான நிலையங்களின் பட்டியலை இம்மாதம் வெளியிட்டது.10 கோடிக்கும் அதிகமான பயணிகளை கையாளும் 6 சர்வதேச விமான நிலையங்கள் பட்டியலில் ஆண்டுக்கு 10.90 கோடி பயணிகளை கையாண்டுள்ள டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையமும் இடம்பெற்றுள்ளது.
இதன் மூலம் ஆசியாவிலேயே டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்திற்கு அடுத்து டெல்லி சர்வதேச விமான நிலையம் இந்த சிறப்பை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் 2024 ஆண்டு தரவுகளின்படி அட்லாண்டா விமான நிலையம் ஆண்டுக்கு 12.5 கோடி பயணிகளை கையாண்டு முதல் இடத்தில உள்ளது. 12 கோடி பயணிகளை கையாண்டு துபாய் இரண்டாவது இடத்திலும் டோக்கியோ ஹனேடா விமான நிலையம் 11 கோடி பயணிகளையும், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 10.90 கோடி பயணிகளையும் கையாண்டு உள்ளன. இதற்கு அடுத்த அடுத்த இடங்களில் ஹீத்ரோவ் விமான நிலையமும், டல்லாஸ் விமான நிலையமும் இடம் பெற்றுள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் இரண்டாவது முனையம் இணைக்க அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால் ஆண்டுக்கு 14 கோடி பயணிகளை கையாளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவிலும் விமான நிலையங்களை விரிவாக்கம் செய்யும் பணிகளை பல்வேறு நாடுகள் முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றன. தற்போது 9 கோடி பயணிகளை கையாண்டு வரும் இஸ்தான்புல் விமான நிலையத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் 12 கோடி பேரை கையாளும் வகையில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல ரியாத்தில் அமைய உள்ள கிங் சல்மான் சர்வதேச விமான நிலையத்தில் 2030க்குள், 12 கோடி பயணிகளை கையாள திட்டமிடப்பட்டுள்ளது.