நாளை உலக கொசு தினம்: ஆண்டுக்கு 10 லட்சம் பேரை கொல்லுமாம்
மதுரை: ‘‘நீயெல்லாம் எனக்கு கொசு மாதிரி; பெரிய கொசுத்தொல்லையா இருக்க’’ என நண்பர்களிடம் இகழ்ச்சியாக பேசும் நபர்களை பார்த்திருப்போம். ஆனால், சிறிய கொசுவில் தான் பயங்கர தகவல்களும் இருக்கின்றன. நாளை (ஆக.20) உலக கொசு தினம் அனுசரிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் மருத்துவர் சர் ரொனால்ட் ரோஸ், 1897 ஆக.20ல் மனிதர்களுக்கு இடையே மலேரியாவை பெண் அனோபிலிஸ் கொசுக்கள் பரப்புவதும், இதன் வயிற்றில் இவ்வகை ஒட்டுண்ணி இருந்ததும் கண்டறியப்பட்டதை நினைவூட்டும் வகையில் இந்த ‘உலக கொசு நாள்’ அனுசரிக்கப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மதுரை மாவட்ட தலைவர், பேராசிரியர் எம்.ராஜேஷ்
கொசுக்கள் பற்றி கூறியதாவது:.
* ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் கொசுக்களால் உருவாகின்றன.
* உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மலேரியா மட்டும் ஆண்டுதோறும் சுமார் 4 லட்சம் இறப்புகளுக்கு வழிவகுக்கிறது.
* மலேரியா, மஞ்சள் காய்ச்சல், ஜிகா, டெங்கு, யானைக்கால் நோய் ஆகியவை கொசுக்களால் ஏற்படும் சில கொடிய நோய்களாகும்.
* பூமியில் காணப்படும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகை கொசுக்கள் பாதிப்பில்லாதவை.
* பறவைகள், வவ்வால்கள் மற்றும் தவளைகள் போன்ற பல உயிரினங்களுக்கு உணவை வழங்குவதால், கொசுக்கள் சுற்றுச்சூழல் அமைப்புக்கு அவசியம். மேலும், மகரந்தச் சேர்க்கை மூலம் சுற்றுச்சூழல் அமைப்பில் கொசுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு கொசு ஒரு பூவின் தேனைக் குடிக்கும்போது, மகரந்தம் அதன் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும். கொசு பின்னர் மகரந்தத்தை பூவிலிருந்து பூவுக்கு மாற்றுகிறது, இது தாவரத்தை இனப்பெருக்கம் செய்ய உதவுகிறது.
* பூமியில் உள்ள கொடிய விலங்குகளில் ஒன்றான கொசுக்கள் வருடத்திற்கு 7 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களின் மரணத்தை ஏற்படுத்துகின்றன.
* கொசுக்கள் இல்லாத ஒரே இடம் அண்டார்டிகா.
* ஒரு பெண் கொசு ஒரு நேரத்தில் 300 முட்டைகள் வரை இடும்.
* ஒரு ஆண் கொசுவின் ஆயுட்காலம் 6 அல்லது 7 நாட்கள், அதேசமயம் பெண் கொசுவின் ஆயுட்காலம் ஐந்து மாதங்கள் வரை நீடிக்கும்.
பொதுவாக, மனிதர்களைக் கடிக்கும் கொசுக்கள் 25 அடிக்கும் குறைவான உயரத்தில் பறக்க விரும்புகின்றன. ஆசிய டைகர் கொசுக்கள் தரையில் இருந்து 40 அடிக்கு மேல் உள்ள மரக்குழிகளில் இனப்பெருக்கம் செய்வது கண்டறியப்பட்டுள்ளது. சிங்கப்பூரில், தரையிலிருந்து 21 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இமயமலையில் 8 ஆயிரம் அடி உயரம் வரையிலும், இந்தியாவில் உள்ள சுரங்கங்களில் 2 ஆயிரம் அடி நிலத்தடி வரையிலும் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வது கண்டறியப்பட்டுள்ளது. கொசுவர்த்தி சுருள், கொசுவிரட்டி மருந்துகள், உடல் முழுவதையும் மறைக்கும் ஆடை, கொசுவலை என கொசுக்களிடமிருந்து தப்பிக்க மனிதர்கள் எத்தனை வழிமுறைகளை கடைபிடித்தாலும், கொசுக்களிடம் இருந்து தப்பிக்கவே முடிவதில்லை.கொசுக்கடியில் இருந்தும், கொசு கடியால் உண்டாகும் நோய்களிலிருந்தும் விடுபட நம்மைச் சுற்றிய சுற்றுப்புறங்களில் கொசுக்கள் தங்காத வகையில் பார்த்துக் கொள்வது நல்லது.
கொசுக்களுக்கு விருப்பமானவர்கள்;
கர்ப்பிணிகள், மதுபானம் அருந்துவோரை கொசுக்கள் தேடிச் சென்று கடிக்குமாம். அடர்நிறத்தில் உள்ள ஆடைகள், கருமையான ஆடைகளை அணிந்திருக்கும் நபர்களையும் அதிகமாக கடிக்கும். அதிக வியர்வை, அதனால் ஏற்படும் துர்நாற்றம் கொண்டிருப்பவரை தேடிப்போய் கடிக்கிறது. உடல் உஷ்ணம் உள்ளவர்களையும் கொசுக்கள் கடிக்குமாம். மனித உடலின் நறுமணம், உடலிலிருந்து வரும் லாக்டிக் அமிலம், மூச்சை வெளியிடும்போது வரும் கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் பல்வேறு வேதிப்பொருட்களை 30 மீட்டர் தொலைவிலிருந்தே கொசுக்கள் கண்டுபிடிக்கின்றன. உடல்பருமன் உள்ளவர்களையும், `ஓ’ பாசிட்டிவ் ரத்த வகையினரையும் ஏடிஸ் கொசுக்கள் அதிகம் கடிப்பது ஆய்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நாளை (ஆக.20) உலக கொசு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், அதிலிருந்து நம்மை பாதுகாப்போம்.