சீனாவில் உலகத் தலைவர்கள் சந்திப்பு; மோடி, புடினை கடுகடுப்புடன் பார்த்த ஷெபாஸ் ஷெரீப்: தனித்து விடப்பட்டதா பாகிஸ்தான்?
புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தானை மையமாகக் கொண்ட லஷ்கர்-இ-தைபா அமைப்பு நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் பதற்றம் நிலவி வருகிறது. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம் என இந்தியா குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட ராணுவ மோதல்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையீட்டால்தான் போர்நிறுத்தம் ஏற்பட்டதாக பாகிஸ்தான் பெருமைப்பட்டுக்கொண்டது. ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தின் வேண்டுகோளுக்கு இணங்கவே போர்நிறுத்தம் செய்யப்பட்டதாக இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்தது. இதேவேளையில், இந்தியாவுடன் அமெரிக்கா வர்த்தகப் பதற்றங்களை அதிகரித்து வரும் சூழலில், தற்போதைய ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் சந்தித்துக்கொண்டபோது, அவர்களிடையே வெளிப்பட்ட நெருக்கம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. மாநாட்டின் முக்கிய அமர்வுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, மூன்று தலைவர்களும் தனியாக நின்று உற்சாகமாக உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் சற்று தள்ளி நின்று கடுகடுப்பான முகபாவனையுடன் அதைப் பார்த்துக்கொண்டிருந்த காட்சி காணொளியாக வெளியாகி வைரலாகியுள்ளது.
முன்னதாக, மாநாட்டிற்கு வந்த தலைவர்கள் எடுத்துக்கொண்ட குழுப் புகைப்படத்திலும் பிரதமர் மோடியிடமிருந்து பல இடங்கள் தள்ளியே ஷெபாஸ் ஷெரீப் நிறுத்தப்பட்டிருந்தார். இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில், ரஷ்ய அதிபர் புடின் மற்றும் சீனா அதிபர் ஜின்பிங்குடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்வுகள், சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் தனித்து விடப்படுகிறதா என்ற விவாதத்தை எழுப்பியுள்ளது.