உலக ஜூனியர் பேட்மின்டன் மின்னலாய் வென்ற வெண்ணலா: ஆடவர் பிரிவில் லால்தஸுவாலா அபாரம்
கவுகாத்தி: பிடபிள்யுஎப் உலக ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று, இந்திய வீராங்கனை வெண்ணலா, அபாரமாக ஆடி அயர்லாந்தின் சியோஃப்ரா பிளினை வீழ்த்தினார். பிடபிள்யுஎப் உலக ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் கவுகாத்தியில் நடந்து வருகின்றன. மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை வெண்ணலா, அயர்லாந்து வீராங்கனை சியோஃப்ரா பிளின் மோதினர். துவக்கம் முதல் அசத்தலாக ஆடிய வெண்ணலா, 15-1, 15-6 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடந்த போட்டியில் இந்தியாவின் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த லால்தஸுவாலா ஹெமர், உகாண்டாவின் டெனிஸ் முகாஸா மோதினர். இந்த போட்டியில் துவக்கம் முதல் அற்புதமாக ஆடி ஆதிக்கம் செலுத்திய ஹெமர், 15-4, 15-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி வாகை சூடினார். ஆடவர் பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் இந்திய வீரர் ஞான தத்து, ஹங்கேரி வீரர் மிலன் மெஸ்டர்ஹாஸியை எதிர்கொண்டார். முதல் செட்டை 5-15 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் இழந்த ஞான தத்து, பின்னர் சுதாரித்து ஆடினார். அடுத்த இரு செட்களையும், 15-7, 15-7 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்திய அவர், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.