உலக ஜூனியர் பேட்மின்டன்: தன்வி சர்மா சாம்பியன்; 17 ஆண்டுகளில் முதல் முறை
கவுகாத்தி: உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டிகளில், 17 ஆண்டுகளில் முதல் முறையாக, இந்திய வீராங்கனை தன்வி சர்மா அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார். கவுகாத்தியில் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை தன்வி சர்மா (16), ஜப்பானின் ஸகி மட்சுமோடோ உடன் மோதினார். முதல் செட்டில் வேகம் இழந்து காணப்பட்ட தன்வி, 13-15 என்ற புள்ளிக் கணக்கில் இழந்தார். இருப்பினும் அதன் பின் சுதாரித்து ஆக்ரோஷமாக ஆடிய தன்வி, அடுத்த இரு செட்களையும் 15-9, 15-10 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்றார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வென்று அவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம், 17 ஆண்டுகளுக்கு பின் ஜூனியர் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை தன்வி சர்மா அரங்கேற்றி உள்ளார்.