2027 உலக கோப்பை திட்டத்தில் ரோகித், கோஹ்லி உள்ளனர்: கேப்டன் சுப்மன் கில் பேட்டி
புதுடெல்லி: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையே 2வது டெஸ்ட் டெல்லியில் இன்று தொடங்கியது. இதனிடையே இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டி: ரோகித் சர்மா, விராட் கோஹ்லி இந்திய அணிக்காக ஏராளமான வெற்றிகளை பெற்றுள்ளனர். அவர்களின் ரெக்கார்டை அவ்வளவு எளிதாக யாராலும் மேட்ச் செய்யவே முடியாது. அவர்களின் திறமை, அனுபவம் ஆகியவற்றுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
தற்போதைய சூழலில் இருவரும் இந்திய அணியின் எதிர்கால திட்டத்தில் (2027 உலக கோப்பை) இருக்கின்றனர். ரோகித்திடம் இருந்து நான் பல நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். அவர் நெருக்கடியான கட்டத்தில் கூட அமைதியாக இருப்பார். வீரர்களுடன் அவர் நல்ல நட்புறவை வைத்துக் கொள்வார். இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் எனக்கு அவரிடம் இருந்து நான் கற்றுக்கொள்ளும் விஷயமாக நினைக்கிறேன்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு பின் கேப்டன் மாற்றம் அறிவிப்பு வெளியாகியது. ஆனால் எனக்கு கொஞ்சம் முன்னதாகவே தெரியும். இந்திய அணியை வழிநடத்துவது பெருமையான ஒன்று தான். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியை வழிநடத்துவதற்கு ஆர்வமாக இருக்கிறேன். ஒரு அணியாக என்ன சாதிக்க போகிறோம் என்பதை காண வேண்டும்.
எதிர் வரும் அத்தனை போட்டிகளையும் வெல்ல வேண்டும். தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உடனான நட்பு சிறப்பாக உள்ளது. வீரர்களை பாதுகாப்புடன் உணர வைப்பது எப்படி என்பது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்களை தயார் செய்ய வேண்டும் என்பதையும் ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.