உலகக் கோப்பையை வென்ற வீராங்கனை ரேணுகா சிங் தாக்கூருக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு
சிம்லா: உலகக் கோப்பையை வென்ற வீராங்கனை ரேணுகா சிங் தாக்கூருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என ஹிமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு அறிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற மகளிர் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதியது. இந்திய அணி நிர்ணயித்த 299 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியை தழுவியதை அடுத்து, எட்டா கனியாக இருந்த உலக கோப்பையை வென்று இந்திய அணி வரலாறு படைத்தது.
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஐசிசியிலிருந்து சுமார் ரூ.40 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. பிசிசிஐ அணிக்கு தனி பரிசுத் தொகை அறிவித்துள்ளது. இதற்கிடையில், மாநில அரசுகளும் வீரர்களுக்கான பரிசுத் தொகையை அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் ஏற்கனவே மத்தியப் பிரதேச வீராங்கனை கிராந்தி கௌடுக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் அறிவித்திருந்தார். இதே போல் ஹிமாச்சல பிரதேச வீராங்கனை ரேணுகா சிங் தாக்கூருக்கு ரூ.1 கோடி பரிசுவழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு அறிவித்துள்ளார்.
ரேணுகா சிங் தாக்கூருடன் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு, உலக கோப்பை வென்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். இந்திய வீராங்கனைகள் உலகளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர் எனவும் தெரிவித்தார். ரேணுகா சிங் தாக்கூர், ஹிமாச்சல பிரதேச இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்க கூடியதாக உள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.