உலகக்கோப்பை செஸ் கோவாவில் நடக்கும்: ஃபிடே அதிகாரப்பூர்வ அறிவிப்பு
புதுடெல்லி: ஃபிடே உலகக் கோப்பை செஸ் 2025 போட்டிகள் கோவாவில் நடக்கும் என, ஃபிடே அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது. ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டிகள், கடந்த 2002ல் இந்தியாவில், ஐதராபாத் நகரில் நடந்தபோது, இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார். அதன் பின் இந்தியாவில் செஸ் போட்டிகள் மக்களிடையே பெரியளவில் வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்நிலையில், ஃபிடே உலகக் கோப்பை செஸ் 2025 போட்டிகள் கோவாவில், அக். 30ம் தேதி முதல் நவ.27ம் தேதி வரை நடக்கும் என, ஃபிடே அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது. இந்த போட்டிகளில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து, 206 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இருப்பினும், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற, நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன், கோவாவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. இந்தியா தரப்பில், உலக சாம்பியன் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகேசி உள்ளிட்ட வீரர்கள் பலத்த போட்டியை எழுப்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.