உலகக்கோப்பை குத்துச்சண்டையில் 9 தங்கம் வென்று இந்தியா வரலாறு: 7 வீராங்கனைகள் கலக்கல்
நொய்டா: உலக கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 9 தங்கம் உட்பட 20 பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது. இதில் 7 வீராங்கனைகள் தங்கம் வென்று கலக்கினர். உலக்கோப்பை குத்துச்சண்டை பைனல்ஸ் 2025 போட்டி உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்து வருகிறது. மொத்தம் 20 எடைப் பிரிவுகளில் நடந்த இப்போட்டியில், அனைத்து பிரிவிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வென்று புதிய வரலாறு படைத்தனர்.
மகளிர் பிரவில் உலக சாம்பியன்கள் மீனாட்சி ஹூடா, ஜாஸ்மின் லம்போரியா மற்றும் முன்னாள் உலக சாம்பியன் நிகத் ஜரீன் உட்பட 7 வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர். 48 கிலோ எடைப் பிரிவில் உஸ்பெகிஸ்தானின் போசிலோவா பர்சோனாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி, இந்தியாவின் மீனாட்சி ஹூடா தங்கப் பதக்கம் வென்றார். 57 கிலோ எடைப் பிரிவில் ஜாஸ்மின் 4-1 என்ற புள்ளி கணக்கில் சீன தைபேயின் வு சிஹ் யியை வென்று தங்கம் வென்றார்.
70 கிலோ எடைப் பிரிவில் உஸ்பெகிஸ்தானின் அசிசா ஜோகிரோவாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி, இந்தியாவின் அருந்ததி சவுத்ரி தங்கப் பதக்கம் வென்றார். 54 கிலோ எடைப் பிரிவில் இத்தாலியின் சிரின் சராபியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி, இந்தியாவின் பிரீத்தி பவார் தங்கப் பதக்கம் வென்றார். 80 கிலோ எடைப் பிரிவில் உஸ்பெகிஸ்தானின் ஓல்டினாய் சோடிம்போவாவை 3-2 என்ற வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியாவின் நுபுர் ஷியோரன் தங்கப் பதக்கம் வென்றார்.
ஆண்கள் 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சச்சின் சிவாச் 5-0 என்ற புள்ளி கணக்கில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற கிரிகிஸ்தானின் முனார்பெக் செய்த்பெக் உல்லுவையும், 70 கிலோ பிரிவில் ஹிதேஷ் 3-2 என்ற கணக்கில் கஜகஸ்தானின் நுர்பக் முர்சலையும் வென்றும் தங்கம் வென்றனர். இப்போட்டியில், 20 பிரிவுகளில் இந்திய வீரர் வீராங்கனைகள் மொத்தம் 9 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் வென்று வரலாற்று சாதனை படைத்தனர்.