உலக செஸ் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி: 17 வயது குகேஷ் அபார சாதனை
மொத்தம் 9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த குகேஷ் (17வயது) உலக சாம்பியன்ஷிப் பைனலில் விளையாட தகுதி பெற்றார். விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு, அதுவும் 10 ஆண்டுகளுக்கு பிறகு உலக சாம்பியன்ஷிப் பைனலில் விளையாட உள்ள இந்தியர், மிக இளம் வயது வீரர் என்ற பெருமைகளை பெற்றுள்ளார். அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப்பில், நடப்பு சாம்பியன் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லிரன் (31 வயது) உடன் குகேஷ் மோதுவார். கடைசி சுற்றில் ஆர்.பிரக்ஞானந்தா, அஜர்பைஜான் வீரர் நிஜாத் அபசோவ்வை வீழ்த்தி 7 புள்ளிகளுடன் 5வது இடமும், மற்றொரு இந்திய வீரர் விதித் சந்தோஷ் குஜராத்தி, பிரான்சு வீரர் அலிரஸா ஃபிரோவுசா உடன் டிரா செய்து 6 புள்ளிகளுடன் 6வது இடமும் பிடித்தனர். கேண்டிடேட்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு முதல் பரிசாக ரூ.78.5 லட்சம் வழங்கப்பட்டது.
சாதனை வீரர் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: வியத்தகு சாதனை புரிந்துள்ள குகேஷுக்கு எனது பாராட்டுகள். ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் மிக இளவயது ‘சேலஞ்சர்’ ஆக வரலாறு படைத்துள்ளார். பதின்பருவத்தில் இத்தகைய வெற்றி பெறும் முதல் வீரராக சாதித்துள்ளார். அடுத்து, டிங் லிரன் உடனான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும் அவர் வெற்றிவாகை சூடிட எனது வாழ்த்துகள்.
* பிரதமர் மோடி, முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் உள்பட அரசியல் தலைவர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.