உலக பேட்மின்டன் சாத்விக், சிராக் இணை அரை இறுதிக்கு தகுதி
பாரிஸ்: உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் நேற்று, இந்தியாவை சேர்ந்த சாத்விக் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை அபார வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதிப் போட்டி ஒன்றில் இந்தியாவை சேர்ந்த சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை, மலேசியாவை சேர்ந்த ஸோ வூய் யிக், ஆரோன் சியா டெங் ஃபாங் இணையுடன் மோதினர். போட்டியின் துவக்கம் முதல் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்தினர். முதல் செட்டில் அபாரமாக ஆடிய அவர்கள், 21-12 என்ற புள்ளிக் கணக்கில் வென்றனர். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் சிறிது போட்டி காணப்பட்டபோதும், அந்த செட்டையும், 21-19 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய வீரர்கள் கைப்பற்றினர். அதனால், 2-0 என்ற நேர் செட்கணக்கில் வென்ற அவர்கள் அரை இறுதிக்கு முன்னேறினர். அரை இறுதிப் போட்டியில் சீன வீரர்கள் லியு யி, சென் போயாங் உடன் இந்திய இணை மோதவுள்ளனர்.