உலக தடகள சாம்பியன்ஷிப்: 100 மீட்டர் மகளிர் ஓட்டம் சாதனை படைத்த மெலிசா
டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் 100 மீட்டர் மகளிர் ஓட்டப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை மெலிசா ஜெபர்சன் உடன் (24), 10.61 விநாடியில் பந்தய தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகின்றன. நேற்று, மகளிர் பிரிவு 100 மீட்டர் ஓட்டப் போட்டிகள் நடந்தன. இதில் அசுர வேகத்தில் ஓடிய அமெரிக்க வீராங்கனை மெலிசா ஜெபர்சன் உடன், 10.61 விநாடியில் போட்டி தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில், அவர் இரண்டாவது குறைந்த நேரத்தில் இந்த சாதனையை படைத்துள்ளார். மேலும், உலகளவில், மகளிர் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 4வது குறைந்த நேரத்தில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தி உள்ளார். கடந்த 2021ல் டோக்கியோ ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில், எலெய்ன் தாம்ப்சன் ஹெரா நிகழ்த்திய சாதனையை, மெலிசா சமன் செய்துள்ளார். இப்போட்டியில் ஜமைக்கா வீராங்கனை டினா கிளேட்டன், 10.76 விநாடியில் ஓடி 2ம் இடத்தை பிடித்தார்.
* நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற தாரா
டோக்கியோவில் நேற்று நடந்த உலக சாம்பியன்ஷிப் நீளம் தாண்டுதல் போட்டியில் அமெரிக்க வீராங்கனை தாரா டேவிஸ் உட்ஹால், 7.13 மீட்டர் தூரம் தாண்டி முதலிடம் பிடித்தார். கடந்த ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்ற அவர் நேற்றைய போட்டியிலும் தங்கம் வென்று அசத்தியுள்ளார். ஜெர்மனி வீராங்கனை மலைக்கா மிஹாம்போ வெள்ளிப் பதக்கமும், கொலம்பியா வீராங்கனை நடாலியா லினாரெஸ் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
* உயரம் தாண்டுதல் இறுதிச்சுற்று முதல் இந்தியராக சர்வேஷ் தகுதி
உலக சாம்பியன்ஷிப் உயரம் தாண்டுதல் போட்டிக்காக நடந்த ஆடவர் பிரிவு தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் சர்வேஷ் குஷாரே பங்கேற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். உலக சாம்பியன்ஷிப் உயரம் தாண்டுதல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை சர்வேஷ் பெற்றுள்ளார். இந்த தகுதி போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியன் ஜியான்மார்கோ டாம்பெரி யாரும் எதிர்பாராத விதமாக தோல்வியடைந்து வெளியேறினார். சர்வேஷ், தனது இரண்டாவது முயற்சியில், 2.25 மீட்டர் உயரம் தாண்டி, இறுதிப் போட்டியில் பங்கேற்கும் 13 வீரர்களில் ஒருவராக தகுதி பெற்றுள்ளார்.