உலக பளுதூக்குதல் போட்டி: 48 கிலோ பிரிவில் மீராவுக்கு வெள்ளி
ஃபோர்டே: நார்வேயில் நடந்த உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு, வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். நார்வேயின் ஃபோர்டே நகரில் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு பங்கேற்றார். அந்த போட்டியில் தற்போதைய சாம்பியனான, கொரியாவின் ரி சாங் கம் 213 (91 122கிலோ) கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் அவர் புதிய உலக சாதனையையும் படைத்தார்.
இந்திய வீராங்கனை மீராபாய், 199 கிலோ (ஸ்நாட்ச் முறையில் 84 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் முறையில் 115 கிலோ) எடை தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். தாய்லாந்து வீராங்கனை தன்யதான் சுக்சரோன் 198 கிலோ எடை தூக்கி 3ம் இடம் பிடித்து வெண்கலம் வென்றார். மீராபாய், இதற்கு முன், கடந்த 2017ம் ஆண்டு, அனாஹீம் நகரில் நடந்த போட்டியில் 194 கிலோ எடை தூக்கி முதல் முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார். 2022ம் ஆண்டு நடந்த போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.