உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 3ம் இடத்தில் இந்தியா
லண்டன்: இங்கிலாந்து அணியுடனான 5 டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்ற, சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதல் 4 போட்டிகளின் முடிவில், 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றிருந்தது. அந்நிலையில், லண்டன் ஓவல் அரங்கில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றியை பதிவு செய்தது.
அதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 புள்ளிப் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா, கடைசி டெஸ்டில் பெற்ற வெற்றியால், 28 புள்ளிகளுடன், 46.67 சதவீத வெற்றியை பதிவு செய்து, 3ம் இடத்துக்கு உயர்ந்துள்ளது. கடைசி டெஸ்டில் தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி, 26 புள்ளிகளுடன், 43.33 சதவீத வெற்றி பெற்று, 4ம் இடத்தை பிடித்துள்ளது.
இப்பட்டியலில், ஆஸ்திரேலியா அணி, 3 போட்டிகளில் ஆடி, 3லும் வெற்றி பெற்று, 36 புள்ளிகளை பெற்றதால், 100 சதவீத வெற்றியுடன் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. இலங்கை அணி, 2 டெஸ்ட் கொண்ட தொடரில் ஒன்றில் வென்று, 16 புள்ளி, 66.67 சதவீத வெற்றியுடன் 2ம் இடத்தில் நீடிக்கிறது. தவிர, வங்கதேசம், 16.67 சதவீத வெற்றியுடன் 5ம் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ், நியுசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் எந்த டெஸ்ட் தொடரிலும் ஆடாததால், அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
* வெஸ்ட் இண்டீஸ் அக்டோபரில் வருகை
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வருகிறது. அந்த அணி, இந்திய அணியுடன் அக். 2 முதல் 6 வரை முதல் டெஸ்டிலும், 10 முதல் 14 வரை 2வது டெஸ்டிலும் ஆடவுள்ளது. அதைத் தொடர்ந்து, தென் ஆப்ரிக்கா அணி இந்தியா வருகிறது. தென் ஆப்ரிக்கா - இந்தியா இடையில், நவம்பர் 14 முதல் 18ம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியும், நவம்பர் 22 முதல் 26 வரை 2வது டெஸ்ட் போட்டியும் நடக்கவுள்ளன.