அமெரிக்காவின் 25% வரி விதிப்பால் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்காதது நல்ல நடவடிக்கை: இந்தியாவுக்கு டிரம்ப் பாராட்டு
அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதால், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாகவும், ரஷ்யாவிடமிருந்து அதிகளவு கச்சா எண்ணெய் வாங்குவதால் அதற்காக இந்தியாவுக்கு அபராதம் விதிப்பதாகவும், இது ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து டிரம்பை சமாதானப்படுத்த ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே நிறுத்திவிட்டதாக ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டது.
இதனை இந்திய அதிகாரிகள் மறுத்தாலும், ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் அதிபர் டிரம்பிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘இந்தியா இனி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கப் போவதில்லை என முடிவு செய்திருக்கும் தகவலை நானும் கேள்விப்பட்டேன். அது உண்மையானதா, இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் இது ஒரு நல்ல நடவடிக்கை. என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்’’ என்றார்.
முன்னதாக, இந்தியா, ரஷ்யா பொருளாதாரங்களை செத்துப் போனவை என குறிப்பிட்ட டிரம்ப், அவர்கள் இருவரும் என்ன செய்தாலும் கவலையில்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வேலைவாய்ப்பு அறிக்கை அதிகாரியை நீக்கிய டிரம்ப்
அமெரிக்காவில் ஜூலை மாதத்தில் பணியமர்த்தல் மந்தமாகவும், மே மற்றும் ஜூன் மாதங்களில் மிகவும் பலவீனமாகவும் இருந்ததாக அரசின் மாதாந்திர வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள் அமைப்பு தரவுகளை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து இந்த அமைப்பின் தலைவர் எரிகா மெக்என்டார்பரை பணிநீக்கம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். முந்தைய அதிபர் பைடனால் நியமிக்கப்பட்டவரான என்டார்பர் அரசியல் காரணங்களுக்காக இத்தகைய அறிக்கையை வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ள டிரம்ப், என்டார்பருக்கு பதிலாக தகுதியான திறமையான ஒருவரை நியமிக்க உத்தரவிட்டுள்ளார்.