டிரம்ப் தலையீட்டால் தாய்லாந்து- கம்போடியா போர் நிறுத்தம்: மலேசியாவில் இன்று பேச்சுவார்த்தை
சுரின்: கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்னை இருந்து வருகிறது. கடந்த 24ம் தேதி தாய்லாந்து- கம்போடியா ராணுவங்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இரு நாடுகள் இடையேயான எல்லை பிரச்னை போராக மாறியது. இரு தரப்பினரும் கடுமையாக மோதி கொண்டனர். இதில் 33 பேர் கொல்லப்பட்டனர். ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் எல்லை பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் தாய்லாந்து-கம்போடியா தலைவர்களுடன் பேசி போர் நிறுத்தத்துக்கு சம்மதிக்கச் செய்தேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார். இதை கம்போடியா பிரதமர் ஹுன் மானேத் ,தாய்லாந்து பிரதமர் பும்தாம் வெச்சயாசாய் ஆகியோர் உறுதி செய்தனர். இதன் தொடர்ச்சியாக தாய்லாந்து- கம்போடியா தலைவர்கள் மலேசியாவில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்று தாய்லாந்து பிரதமரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.