டிசிஎஸ்சில் 12 ஆயிரம் பேர் நீக்கம்; ‘ஏஐ’ வளர்ச்சியால் பெரும் ஆபத்து: மெட்டா, இன்டெல் நிறுவனங்களும் ஆட்குறைப்பு
புதுடெல்லி: ‘ஏஐ’ தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்லாயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் ெசய்ய முடிவு செய்துள்ளதால் ஊழியர்கள் மத்தியில் கடுமையான வேலைப் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள், மாறிவரும் வணிகத் தேவைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) தேவைக்கு தங்களை மாற்றியமைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சில நிறுவனங்கள் செயல்திறன் மற்றும் மறுசீரமைப்பு காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுப்பதாகக் கூறினாலும், டாடா போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் திறனுள்ள ஊழியர்கள் கிடைக்காததால் பணிநீக்கங்கள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), தனது உலகளாவிய ஊழியர்களில் சுமார் 2%, அதாவது சுமார் 12,261 ஊழியர்களைக் குறைக்க உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஆண்டு 15,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இது தவிர, குறைந்த செயல்திறன் கொண்டவர்கள் எனக் கண்டறியப்பட்ட சுமார் 2,000 ஊழியர்களும் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை உருவாக்க சுமார் 80 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் நிலையில், மறுசீரமைப்பு அவசியம் என்று தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார். அதேபோல், இன்டெல் நிறுவனம் இந்த ஆண்டில் மிகப்பெரிய ஆட்குறைப்பை அறிவித்துள்ளது. அந்நிறுவனம் தனது மொத்த ஊழியர்களில் கால் பங்கான சுமார் 24,000 பேரைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. மெட்டா நிறுவனம் தனது விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி தயாரிப்புகளைக் கையாளும் ‘ரியாலிட்டி லேப்ஸ்’ பிரிவில் புதிய ஆட்குறைப்பைச் செய்துள்ளது.
ஜப்பானிய தொழில்நுட்ப பானாசோனிக் நிறுவனமும், செலவுகளைக் குறைத்து செயற்கை நுண்ணறிவு போன்ற எதிர்கால தொழில்நுட்பங்களில் அதிகம் முதலீடு செய்வதற்காக 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதில் பாதி பணிநீக்கங்கள் ஜப்பானிலும், மீதமுள்ளவை வெளிநாடுகளிலும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், ஒவ்வொரு நிறுவனமும் வெவ்வேறு காரணங்களைக் கூறினாலும், செயல்திறனை அதிகரிப்பது, செலவுகளைக் குறைப்பது மற்றும் செயற்கை நுண்ணறிவுப் புரட்சிக்குத் தயாராவது என்பதே இந்தப் பணிநீக்கங்களின் மைய நோக்கமாக உள்ளது. இதுபோன்ற பணிநீக்கங்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரிய மாற்றத்தையும், ஊழியர்கள் மத்தியில் கடுமையான வேலைப் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய அரசு கவலை
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 12,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்ததைத் தொடர்ந்து, ஐடி அமைச்சகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐடி அமைச்சகம் சார்பில் கூறுகையில்,’ டிசிஎஸ் நிறுவனத்தில் இது ஏன் நடக்கிறது என்பது குறித்து ஐடி அமைச்சகம் கவலை கொண்டுள்ளது. இந்த பணி நீக்கத்திற்கான அடிப்படை காரணத்தை புரிந்து கொள்வது அவசியம். வேலைவாய்ப்பு வளர்ச்சி ஒரு முக்கிய முன்னுரிமையாக உள்ளது. அதே நேரத்தில், திறன் மேம்பாடு மற்றும் மறுதிறன் மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் டிசிஎஸ் நிலைமையை தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும் டிசிஎஸ் நிறுவனத்துடன் ஒன்றிய அரசு தொடர்பில் உள்ளது.
டிசிஎஸ் விளக்கம்
பணி நீக்கம் குறித்து டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: டிசிஎஸ் நிறுவனம் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் ஒரு நிறுவனமாக மாறுவதற்கான பயணத்தில் உள்ளது. இதில் புதிய தொழில்நுட்பப் பகுதிகளில் முதலீடு செய்தல், புதிய சந்தைகளில் நுழைதல், எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் எங்களுக்கும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல், அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பை உருவாக்குதல், எங்கள் பணியாளர் மாதிரியை மறுசீரமைப்பு செய்தல் உள்ளிட்ட பல முயற்சிகள் அடங்கும். இதை நோக்கி முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, பணியமர்த்தலில் சாத்தியமில்லாத ஊழியர்கள் நிறுவனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். இது நமது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 2 சதவீதத்தை கொண்டுள்ளது. இந்த ஆண்டு முழுவதும் இதன் பாதிப்பு தொடரும். இருப்பினும் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு டிசிஎஸ் சார்பில் பொருத்தமான சலுகைகள், இடமாற்றம், ஆலோசனை மற்றும் ஆதரவு நிச்சயமாக வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
2025 ஜூன் 30 நிலவரப்படி டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாளர்கள் எண்ணிக்கை 6,13,069 ஆக இருந்தது. சமீபத்தில் முடிவடைந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அதன் பணியாளர்களின் எண்ணிக்கையில் கூடுதலாக 5,000 ஊழியர்கள் சேர்க்கப்பட்டனர். தற்போது ஏஐ வளர்ச்சியால் ஒரே நேரத்தில் 12,261 பேரை நீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.