தாய்லாந்து - கம்போடியா இடையே போர் மூண்டது: விமானங்கள் குண்டுமழை, 10 பேர் பலி
இந்நிலையில் தாய்லாந்து -கம்போடியா இடையே நேற்று போர் மூண்டது. கம்போடியாவில் ராணுவ இலக்குகள் மீது தாய்லாந்து ராணுவம் வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளது. சிவன் கோயிலுக்கு அருகில் உள்ள சாலையில் தாய்லாந்து குண்டுகளை வீசியதாகவும் கம்போடியா தெரிவித்துள்ளது. இதேபோல் தாய்லாந்தில் உள்ள மருத்துவமனை உட்பட ராணுவம் மற்றும் ராணுவம் அல்லாத தளங்கள் மீது கம்போடியா தாக்குதல் நடத்தியதாக தாய்லாந்து தெரிவித்துள்ளது.
தாய்லாந்தின் சி சா செட் மாகாணத்தில் அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாக தாய்லாந்து ராணுவம் தெரிவித்துள்ளது. எரிவாயு நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 எல்லை மாகாணங்களில் தாக்குதல் சம்பவங்களில் 14 பேர் காயமடைந்துள்ளனர். எல்லையில் சுமார் 6 பகுதிகளில் மோதல்கள் நடந்து வருவதாக தாய்லாந்து பாதுகாப்பு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். போர் காரணமாக இரு நாடுகளும் தங்களது ராஜாங்க ரீதியிலான உறவுகளை குறைத்துள்ளன.
தூதர்கள் வெளியேற்றம்: தாய்லாந்தில் நேற்று முன்தினம் கண்ணிவெடி வெடித்து 5தாய்லாந்து வீரர்கள் காயமடைந்த நிலையில், தாய்லாந்து தனது தூதரை திரும்ப பெற்றது. மேலும் பாங்காகில் இருந்த கம்போடிய தூதரும் அதிரடியாக வெளியேறும்படி உத்தரவிட்டது. இதனை தொடர்ந்தே மோதல் வெடித்தது . மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் கம்போடியா உடனான அனைத்து எல்லைகளையும் தாய்லாந்து மூடியுள்ளது. இதேபோல் கம்போடியாவும் தனது எல்லைகளை மூடியுள்ளது.