மிகவும் நம்பகமான நட்பு நாடு; மாலத்தீவுக்கு ரூ.4,850 கோடி கடன் உதவி: பிரதமர் மோடி அறிவிப்பு
பின்னர் மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுடன் பிரதமர் மோடி இருநாடுகள் இடையே வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பது குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினார். 2023 நவம்பரில் அதிபராக முய்சு பதவி ஏற்றது முதல் இந்தியா ராணுவத்தை வெளியேற்றி, சீனா பக்கம் திரும்பியதால் இருநாடுகள் இடையே ஏற்பட்ட பதற்றம் இதன் மூலம் தணிந்தது. மேலும் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சு வார்த்தை நடந்தது.
இந்த பேச்சுவார்த்தை முடிவில் இந்தியா சார்பில் மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்க முடிவு செய்துள்ளதாக மோடி தெரிவித்தார். அதோடு பாதுகாப்பு துறையில் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை அடிப்படையில் செயல்பட முடிவு செய்து இருப்பதாகவும், மாலத்தீவின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்த இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்த மோடி,’ என்னை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்த அதிபர் முய்சுவின் செயல் என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. வரும் காலங்களில் இந்தியா-மாலத்தீவு நட்புறவு முன்னேற்றத்தின் புதிய உயரங்களை எட்டும் என்று நான் நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.