உலக நாடுகளுடன் இணைந்து காசா மீதான போரை நிறுத்த இந்தியா முயற்சிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காசா மீது இன அழிப்புப் போரை நடத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேல், ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்களை கொன்றுள்ளது. மறுபுறம், காசாவிற்குள் உணவுப் பொருட்களை அனுமதிக்காமல் பட்டினிப் போரை தொடுத்து வருவதாலும் ஊட்டச் சத்துக் குறைபாட்டாலும், பசியாலும் ஆயிரக்கணக்கான குழந்தைகளும் செத்து மடிந்துள்ளனர்.
காசா நகரத்தின் மீது தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்துவதன் மூலம் அப்பகுதியில் உள்ள 10 லட்சம் மக்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றி, காசாவின் அல்-மவாசி மற்றும் தெற்குப் பகுதியில் உள்ள முகாம்களுக்கு வலுக்கட்டாயமாக அனுப்பி வருகிறது. ஹமாஸ் இயக்கத்தை அழிப்பது தான் தன்னுடைய நோக்கம் என்று அறிவித்துக் கொண்டு காசா மீதான போரைத் தொடங்கிய இஸ்ரேல் அரசு, தற்போது காசாவை முழுமையாக கைப்பற்றுவது தான் தன்னுடைய நோக்கம் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது.
செப்டம்பர் 16ம் தேதி தொடங்கிய தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்துகிறது. ஈழத் தமிழர்கள் இலங்கை இனவெறி அரசால் லட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட பொழுது உலக நாடுகளும், ஐ.நா. மன்றமும் கையறு நிலையில் வேடிக்கை பார்த்தன. அதே போன்று இன்றைக்கு பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் அப்பாவி மக்கள் படுகொலையை இந்திய அரசு வேடிக்கை பார்க்க கூடாது. காசா மீதானப் போரை நிறுத்துவதற்கு உலக நாடுகளோடு இணைந்து இந்தியா முன் முயற்சி மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.