உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் பைனலில் நீரஜ் சோப்ரா ஏமாற்றம்
டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் நீரஜ் சோப்ரா 8ம் இடம் பிடித்து ஏமாற்றமளித்தார். ட்ரீன்டாட் வீரர் சாம்பியனான நிலையில், இந்தியாவின் மற்றொரு வீரரான சச்சின்யாதவ் 4ம் இடம் பிடித்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது. ஆண்களுக்கான ஈட்டி எறிதலின் இறுதிப்போட்டி நேற்று மாலை நடந்தது. நடப்பு சாம்பியனான இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரும் ஏமாற்றம் அளித்தார்.
மழை பெய்து கொண்டிருக்கும் போது நடந்த இப்போட்டியில் நீரஜ் சோப்ரா, 84.03 மீட்டர் தூரத்தை அதிகபட்சமாக எறிந்தார். மேலும் தனது 5வது முயற்சியில் ஃபவுல் செய்தார். இதனால் இறுதிச்சுற்றுக்கு முன்பு போட்டியில் இருந்து வெளியேறினார். இந்தியாவின் மற்றொரு ஈட்டி எறிதல் வீரரான சச்சின் யாதவ் அதிகப்பட்சமாக 86.27 மீட்டர் தூரத்துடன் 4ம் இடம் பிடித்து ஆறுதல் அளித்தார். இப்போட்டியில் ட்ரீன்டாட் மற்றும் டோபாகோ நாட்டின் கெஷோர்ன் வால்காட் 88.16 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் வென்றார்.
கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 87.38 மீட்டர் தூரத்தை எறிந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். அமெரிக்காவின் கர்டிஸ் தாம்சன் 86.67 மீட்டர் தூரத்தை எறிந்து வெண்கலப்பதக்கம் வென்றார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டி சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் ஆரம்பத்திலேயே வெளியேற்றப்பட்டார். அவர் மிக குறைந்த அளவாக 82.75 மீட்டர் தூரத்தை எறிந்து 10வது இடத்தை பிடித்தார்.
மற்றொரு போட்டியாக பெண்களுக்கான 800 மீட்டர் தகுதிச்சுற்று ஓட்டத்தில் இந்தியாவின் பூஜா பங்கேற்று ஓடினார். அவர், 2.01 நிமிடத்தில் இலக்கை எட்டி 7வது இடத்தையே பெற்றார். இதன்மூலம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறினார். 200 மீட்டர், 800 மீட்டர் ஆண்கள், பெண்கள் அரையிறுதி போட்டிகளில் அமெரிக்க வீரர், வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர்.