உலக ரேபிஸ் தினத்தையொட்டி கால்நடை மருத்துவமனையில் 84 நாய்கள், பூனைக்கு தடுப்பூசி
கோவை : கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனையில் உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. முகாமில் செல்லப்பிராணிகளான நாய்கள், பூனைகள் ஆகியவைக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதன்படி, 12 பூனைகளுக்கும், காவல்துறை சேர்ந்த 4 மோப்ப நாய்கள் உள்பட 74 நாய்களுக்கும் என மொத்தம் 86 செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமிற்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் மகாலிங்கம் தலைமை வகித்தார்.
உதவி இயக்குனர் கீதா, கால்நடை புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் சுரேஷ்குமார்,கால்நடை உதவி மருத்துவர்கள் வசந்த், நித்தியவள்ளி, வெற்றிவேல் ஆகியோர் பங்கேற்று நாய், பூனைகளுக்கு தடுப்பூசியை செலுத்தினர்.
தொடர்ந்து ரேபிஸ் நோயின் விளைவுகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், பொதுமக்கள் அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைகளில் செல்லப்பிராணிகளுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசியை இலவசமாக செலுத்தி கொள்ள வேண்டும் என கால்நடை டாக்டர்கள் அறிவுறுத்தினர்.