டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு மக்களவையில் பாராட்டு ..!!
டெல்லி: டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு மக்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இன்று தொடங்கிய குளிர்கால கூட்டத் தொடர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. பீகார் தேர்தல், டெல்லி கார் வெடிப்பு, எஸ்.ஐ.ஆர். முறைகேடுகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ஜகதீப் தன்கர் ராஜினாமா சர்ச்சைக்குப் பிறகு சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்ற நிலையில் நாடாளுமன்றம் கூடியுள்ளது. முதல்முறையாக மாநிலங்களவை கூட்டத்தை சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையேற்று நடத்துகிறார். நடப்பு கூட்டத்தொடரில் 14 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. மாநிலங்களவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதை தொடர்ந்து, மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அதில்
சி.பி.ராதாகிருஷ்ணனை வரவேற்று பிரதமர் மோடி பேச்சு
முதல்முறையாக மாநிலங்களவை கூட்டத்தை தலைமையேற்று நடத்தும் சி.பி.ராதாகிருஷ்ணனை பிரதமர் மோடி வரவேற்றார். குடியரசு துணைத் தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் மாநிலங்களவை தலைவராக பொறுப்பேற்று அவையை நடத்துவார். நாட்டுக்கு சேவையாற்றவே வாழ்வை அர்ப்பணித்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன். சி.பி.ராதாகிருஷ்ணனுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி.
உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு மக்களவையில் பாராட்டு
பின்னர், டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு மக்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. உலகக்கோப்பையை வென்ற கபடி அணிக்கும் மக்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம்
எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வருகின்றனர். எஸ்.ஐ.ஆர்., நெல் ஈரப்பதம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். எதிர்க்கட்சிகள் அளித்த ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசுகளை ஏற்று அவையில் விவாதம் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
மக்களவை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.