சென்னை: தமிழக வேளாண் துறையில் காஞ்சிபுரத்தில் பணியாற்றும் பெண் அதிகாரி, தன்னுடன் பணியாற்றும் 2 உயர் அதிகாரிகள் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.இந்த நிலையில், அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, தனது புகார் மீதான விசாரணையை திசை திருப்பும் வகையில், தன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பெண் அதிகாரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த மார்ச் 20ம் தேதி பெண் அதிகாரிக்கு எதிரான குற்ற குறிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மீறி, தன்னை சென்னைக்கு இடமாற்றம் செய்ததுடன், தனக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை விசாரணையை தொடர்ந்து நடத்தி வருவதாக கூறி அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், மனுவுக்கு பதிலளிக்குமாறு வேளாண் வர்த்தக பிரிவு ஆணையர், துணை இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிட்டு விசாரணயை ஆகஸ்ட் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.