வேலைச்சுமை காரணமாக மன உளைச்சல் எஸ்ஐஆர் பணியில் ஈடுபட்ட பிஎல்ஓ தற்கொலை: கேரளாவில் பரிதாபம்
திருவனந்தபுரம்: கண்ணூர் அருகே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டு வந்த பிஎல்ஓ பணிச்சுமை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடும் எதிர்ப்பையும் மீறி தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் பிஎல்ஓக்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும் என்பதால் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தள்ளி வைக்க வேண்டும் என்று கேரளா கூறி வருகிறது. ஆனால் தேர்தல் ஆணையம் இதற்கு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் பணிச்சுமை காரணமாக கண்ணூர் அருகே பிஎல்ஓ தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்ணூர் மாவட்டம் பையனூர் அருகே உள்ள ஏற்றுகுடுக்கா பகுதியை சேர்ந்த அனீஷ் ஜார்ஜ் என்பவர் அப்பகுதியில் பிஎல்ஓ வாக நியமிக்கப்பட்டிருந்தார்.
இவர் அங்குள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் பியூனாக இருந்தார். தனக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால் பிஎல்ஓ பணியில் நியமிக்க வேண்டாம் என்று இவர் ஏற்கனவே மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்திருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களாக இவர் இரவு, பகலாக பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் நேற்று அனீஷ் ஜார்ஜ் வீட்டில் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். பணிச்சுமை தான் இவரது தற்கொலைக்கு காரணம் என்று அனீஷ் ஜார்ஜின் உறவினர்களும், உடன் பணிபுரிந்தவர்களும் கூறுகின்றனர்.
* வேலையை புறக்கணித்து போராட்டம்
பணிச்சுமை காரணமாக பிஎல்ஓ அனீஷ் ஜார்ஜ் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து கேரளாவில் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்த பிஎல்ஓக்கள் தீர்மானித்துள்ளனர். தங்களுக்கு தேர்தல் ஆணையம் அதிக பணிச்சுமையை தந்து மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்றும், இதன் காரணமாகத்தான் பிஎல்ஓ அனீஷ் ஜார்ஜ் தற்கொலை செய்து கொண்டார் என்றும் போராட்டக் குழுவினர் கூறினர்.