தீபாவளி போனஸ் வழங்காததால் விரக்தி: இனிப்பு பெட்டிகளை வீசி எறிந்த தொழிலாளர்கள்
சண்டிகர்: அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டம், கனவுர் பகுதியில் பிரபல நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை. இதனால் ஊழியர்கள் கடும் விரக்தியில் இருந்தனர். இந்நிலையில்தான் நிறுவனம் சார்பில், அனைத்து ஊழியர்களுக்கும் சில நாட்களுக்கு முன் தீபாவளி பரிசாக சோன் பப்டி இனிப்பு பெட்டிகள் வழங்கப்பட்டன. இதனால் ஊழியர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். அவர்கள், அந்த இனிப்பு பெட்டிகளை நிறுவனத்தின் வாயிலில் வீசினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கூறுகையில், ‘தீபாவளி போனஸ் வழங்குவதாக நிர்வாகம் உறுதி அளித்திருந்தது. ஆனால் போனசுக்கு பதிலாக இனிப்பை வழங்கி ஏமாற்றி விட்டனர். எங்களது எதிர்ப்பை பதிவு செய்ய இனிப்பு பெட்டிகளை நிறுவனத்தின் வாயிலில் வீசி எறிந்தோம்’ என்றனர்.