தோட்டத்தில் காவல் இருந்தபோது யானை மிதித்து தொழிலாளி பரிதாப சாவு: கடம்பூர் மலைப்பகுதியில் சோகம்
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் ஏலஞ்சியை சேர்ந்தவர் பிரபு (38). இவர் அதே பகுதியில் உள்ள பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், தோட்டத்தில் வாழைகளை, யானைகளிடம் இருந்து காப்பாற்ற பிரபு இரவு நேரத்தில் காவல் பணி மேற்கொள்வது வழக்கம். நேற்று இரவு வழக்கம் போல் தோட்டத்தில் காவலில் ஈடுபட்டபோது, நள்ளிரவு ஒரு காட்டு யானை வாழை தோட்டத்திற்குள் நுழைந்தது. உடனே அக்கம் பக்கத்து விவசாயிகளின் உதவியுடன் பிரபு விரட்ட முயன்றார்.
அப்போது திடீரென பிரபுவை யானை துரத்தி தும்பிக்கையால் தாக்கி காலால் மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே பிரபு உயிரிழந்தார். தகவலறிந்து கடம்பூர் வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். தொடர்ந்து பிரபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.