பணியின்போது மரணமடைந்த 5 அரசு ஊழியர் குடும்பத்துக்கு ரூ.4.38 கோடி நிதி உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, விபத்து மற்றும் இயற்கை மரணமடைந்த 5 அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவியாக 4 கோடியே 38 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார். 2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்தபோது, அரசு அலுவலர்கள் எதிர்பாராதவிதமாக விபத்தில் இறந்து போனாலோ அல்லது விபத்தின் காரணமாக நிரந்தர ஊனமடைந்தாலோ காப்பீடு, நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி, தனிநபர் விபத்து காப்பீட்டு தொகையாக ரூ.1 கோடி, விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உள்ள திருமண வயதை எட்டியுள்ள மகளின் திருமண செலவுகளுக்காக மகள் ஒருவருக்கு தலா ரூ.5 லட்சம் வீதம், 2 மகள்களுக்கு ரூ.10 லட்சம், உயர்கல்வி படிக்கும் அவர்களின் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வரை உதவித்தொகை உள்ளிட்ட பல சலூகைகள் அறிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்து காப்பிட்டுத் தொகை மற்றும் பிற வங்கிச் சலுகைகளை கட்டணமின்றி வழங்குவதற்காக 19.05.2025 அன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய 7 முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், அரசு ஊழியர்கள் மேற்கண்ட 7 வங்கிகளில் சம்பளக் கணக்குகளைப் பராமரித்தால், மேற்கூறிய சலுகைகள் இலவசமாக வழங்கப்படும். தற்போது வரை, இத்திட்டத்தின் கீழ் 7,31,670 அரசு ஊழியர்கள் தங்களது ஊதிய கணக்கினை மேற்கண்ட ஏழு வங்கிகளில் இணைத்துள்ளனர். தமிழ்நாடு அரசிற்கும், 7 வங்கிகளுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டப் பிறகு, 5 அரசு ஊழியர்கள் இயற்கையாகவும் மற்றும் எதிர்பாராத விபத்தினாலும் உயிரிழந்துள்ளனர்.
மறைந்த அந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினரின் நலன் கருதி, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் கனரா வங்கி ஆகிய வங்கிகளால் வழங்கப்பட்ட விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு தொகை, திருமண உதவித்தொகை மற்றும் உயர்கல்வி உதவித்தொகையான 4 கோடியே 38 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை சென்னை தலைமை செயலகத்தில் முதல்தர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்வில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், நிதித்துறை செயலாளர் (செலவினம்) பிரசாந்த் மு.வடநெரே, ஆகியோர் கலந்து கொண்டனர்.