கரும்பில் பருசீவல் நாற்றுக்கள் (Sugarcane Chip Bud seedlings) உற்பத்தியில் வருமானம் ஈட்டும் மகளிர் சுயஉதவிக்குழு!
மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் புதிய பண்ணை சார்ந்த தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, பயிற்சியளித்து, அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பொதுவாக, கரும்பு விவசாயிகள் நடவுக்கு சுமார் நான்கு டன் விதைக் கரும்பிலிருந்து 30,000 இருபரு விதைக்கரணைகளை பயன்படுத்துவார்கள். இதனால், ஏக்கருக்கு சுமார் 20,000 ரூபாய் செலவாகும். இம்முறையில் சில இடங்களில் நாற்றுக்கள் முளைக்காமல் கரும்பு வயலில் ஆங்காங்கே வெற்றிடங்கள் தெரியும். ஆனால், பருசீவல் நாற்று நடவு முறையில், பூச்சி, நோய் தாக்காத, அதிக மகசூல் தரும் கரும்பு இரகங்களின் விதைக்கரணைகளிலிருந்து, விதைப்பருக்களை மட்டும் பிரித்தெடுத்து, பிளாஸ்டிக் குழித்தட்டுகளில் வைத்து நிழல் வலைக்கூடங்களில் வளர்த்து, ஒரு மாதத்திற்குப் பின் தரமான கரும்பு நாற்றுக்களை மட்டும் தேர்வு செய்து நடவு செய்தால், கரும்பு வயலில் பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்பட்டு, கரும்பு மகசூல் அதிகரிக்கும். இதனால், விதைக்கரும்புக்கான செலவும் கணிசமாக குறைவதோடு, கரும்பின் சாகுபடிக்காலம் ஒரு மாதம் குறைகிறது. அதிகக் கிளைகள் வெடித்து, தனிக்கரும்பின் எடையும் அதிகரிக்கிறது.
இதனை கருத்தில் கொண்டு, சென்ற 2024-25 ஆம் நிதி ஆண்டில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் சட்டமன்ற பேரவையில், ‘சுய உதவிக் குழு மகளிர் விவசாயிகளால் உயர் மகசூல் தரும் கரும்பு இரகங்களின் பரு நாற்றுகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்திட, அலகுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் வீதம் 50 அலகுகளுக்கு ஒரு கோடி ரூபாய் சுழல் நிதியாக வழங்கப்படும்’ என்று அறிவித்தார்கள். துணை முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் முதன்முறையாக, கரும்பு சாகுபடி செய்யப்படும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் 50 கிராம ஊராட்சிகளில் கரும்பில் நாற்று உற்பத்தியில் ஆர்வமுள்ள 20 சுய உதவிக்குழு மகளிர்களை ஒன்றாக இணைத்து குழு அமைத்து ஒவ்வொரு குழுவுக்கும் ரூ.2 இலட்சம் வீதம் 50 குழுக்களுக்கும் மொத்தம் ஒரு கோடி ரூபாய் சுழல் நிதியாக வழங்கப்பட்டது.
இச்சுழல் நிதியின் மூலம், 300 சதுர மீட்டர் பரப்பில் நிழல் வலைக்கூடம் அமைத்து, விதைக்கரணையிலிருந்து பரு எடுக்கும் மோட்டார் இயந்திரம், 1000 பிளாஸ்டிக் குழித்தட்டுக்கள், தேங்காய் நார் கொள்முதல் போன்ற பணிகளை இம்மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை மேற்கொண்டார்கள். தற்போது, இந்த 50 இடங்களிலும் பருசீவல் கரும்பு நாற்று உற்பத்தி துவங்கி, அருகில் உள்ள சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்துள்ள கரும்பு விவசாயிகளுக்கு தரமான கரும்பு பருசீவல் நாற்றுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே, தரமான கரும்பு பருசீவல் நாற்றுக்கள் தேவைப்படும் விவசாயிகள் பின்வரும் இணைப்பில் குறிப்பிட்டுள்ள கிராம ஊராட்சிகளில் நாற்று உற்பத்தியினை மேற்கொண்டு வரும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டு பயனடையலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இணைப்பு
வ. எண் மாவட்டம் வட்டாரம் கிராம ஊராட்சிகள்
1.கடலூர் கடலூர் சி.என்.பாளையம் அண்ணாகிராமம் பூண்டி, உறையூர் பண்ருட்டி சிலமிபாத்தான்பேட்டை
விருத்தாச்சலம் கருவேப்பிலான்குறிச்சி கம்மாபுரம் சாத்தமங்கலம் நல்லூர் ஆதமங்கலம் ஸ்ரீமுஷ்ணம் கானூர் குமராட்சி அகரநல்லூர் காட்டுமன்னார்கோவில் கொண்டசமுத்திரம்
2.விழுப்புரம் திருவெண்ணைநல்லூர் டி.புதுப்பாளையம், அமூர், மலையம்பட்டு, சரவணப்பாக்கம், மேலமங்கலம், அருண்குருக்கை, டி,மலவராயனூர் விக்கிரவாண்டி முண்டியம்பாக்கம், இ.மண்டகப்பட்டு, பிரம்மதேசம், தும்பூர், அசூர்
3.கள்ளக்குறிச்சி சின்னசேலம் உலங்காத்தான் கள்ளக்குறிச்சி மாத்தூர் சங்கராபுரம் அரசம்பட்டு, செம்பரம்பட்டு, நெடுமானூர் ரிஷிவந்தியம் பாக்கம், எடுத்தனூர், பவந்து, திருக்கோவிலூர் சடைக்கட்டி, பாடியாந்தல் பழங்கூர், உளுந்தூர்பேட்டை காட்டுசெல்லூர்
4.திருவண்ணாமலை தண்டராம்பேட்டை அகரம் பள்ளிப்பட்டு, கோட்டையூர், வானாபுரம், தொண்டமானூர், தேன்முடையனூர் செங்கம் பாச்சல், மேல்பென்னத்தூர், உச்சிமலைக்குப்பம், கரியமங்கலம், குப்பநத்தம் புதுப்பாளையம் அமர்நாதபுதூர், புதூர்செங்கம்
5.வேலூர் காட்பாடி பாலக்குப்பம் கன்னியம்பாடி சாலமநத்தம் கே.வி.குப்பம் லத்தேரி, கவசம்பட்டு