மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த பொருட்கள் ரூ.620 கோடிக்கு விற்பனை: உணவுத்திருவிழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
மதுரை: நடப்பாண்டில் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த பொருட்கள் ரூ.620 கோடிக்கு விற்பனையானதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மகளிர் திட்டம் மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சுய உதவி குழு தயாரிப்பு பொருட்களின் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழாவை மதுரை தமுக்கம் மாநாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட துணை முதல்வர், உணவுப் பொருட்களை ருசி பார்த்தார். பின்னர் நடந்த விழாவில் 500 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கான அடையாள அட்டையை வழங்கினார்.
முன்னதாக அவர் பேசியதாவது: உணவுத் திருவிழா சென்ற வாரம் சென்னையில் நடந்தது. மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால், மதுரையில் ஏற்பாடு செய்து நடத்துகிறோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த சுய உதவிக்குழுவினர் மட்டுமின்றி, பல மாநிலங்களில் இருந்து சுய உதவிக்குழு சகோதரிகள் வந்துள்ளனர். சென்ற ஆண்டு 5 நாள் நடந்த உணவுத் திருவிழாவில் விற்பனை ரூ.1.55 கோடியை தாண்டியது. மதுரையில் 12 நாள் நடப்பதால் அதை விட அதிகமானதாக இருக்கும் என நம்புகிறோம். இங்கு நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளும் மகளிர் சுய உதவி குழுவினருக்கு தரும் அன்பு. அரசு எடுத்த நடவடிக்கையால் இந்த ஆண்டு மகளிர் சுய உதவி குழுவினரின் தயாரிப்பு பொருட்கள் ரூ.620 கோடிக்கு விற்பனையாகி மிகப் பெரிய சாதனையை செய்துள்ளோம்.
கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் சென்ற ஆட்சியில் அதிகபட்சம் வருடத்திற்கு ரூ.10 கோடியை தாண்டவில்லை. திராவிட மாடல் அரசின் முயற்சியாலும், முதல்வரின் முயற்சியாலும் இந்த ஆண்டு மட்டும் ரூ.620 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. மகளிர் பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும். அதற்காகவே முதல்வர் ஒவ்வொரு திட்டத்தையும் மகளிருக்காக செய்து வருகிறார். குறிப்பாக, மகளிர் விடியல் பயண திட்டம், புதுமைப்பெண் திட்டம், 1.15 கோடி பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுவினருக்கு எந்த திட்டத்தை சொன்னாலும் நமது முதல்வர் உடனே ஒத்துக் கொள்வார்.
திருவாரூர் மகளிர் சுய உதவிகுழுவினர் வைத்த கோரிக்கை தான் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது. அதை ஏற்று உடனே முதல்வர் அடையாள அட்டை வழங்கினார். இந்த அடையாள அட்டை மூலம் சுய உதவிக்குழுவினரின் தயாரிப்பு பொருட்களை அரசு பேருந்துகளில் 25 கிலோ வரை 100 கிமீ தூரத்திற்கு கட்டணமின்றி கொண்டு செல்ல முடியும். உங்களுக்கு தேவையான அனைத்து உதவியையும் அரசு செய்யும். மகளிர் முன்னேற்றம் தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் முன்னேற்றம், இந்தியாவின் முன்னேற்றம். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், கூடுதல் தலைமை செயலர் ககன்தீப்சிங் பேடி, கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், எம்எல்ஏக்கள் கோ.தளபதி, பூமிநாதன், வெங்கடேசன், துணை மேயர் நாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.